(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் நிலவும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் கூடிய நிலைமைக்கு காரணமானவர்கள் எனக்கூறி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவினை எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான புவனேக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழாம் இதற்கான தீர்மானத்தை அறிவித்தது.
கலாநிதி மஹீம் மென்டிஸ் உள்ளிட்ட திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மூவர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்து வெள்ளிக்கிழமை (10) இதற்கான உத்தரவை நீதியரசர்கள் பிறப்பித்தனர்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்கும் போது மத்திய வங்கியிடம் 7.6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டு கையிருப்ப இருந்தாக மனுதாரர்கள் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அரசாங்கம் கையாண்ட தூரநோக்கற்ற பொருளாதார செயற்திட்டங்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய வரிச் சலுகைகள் உள்ளிட்ட கொள்கைகள் காரணமாக தற்போது நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலைமையை எதிர்க்கொள்வதாக மனுதாரர்கள் மனுவூடாக சுட்டிக்காட்டினர்.
மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் தூரநோக்கற்ற பொருளாதார ரீதியிலான செயற்பாடுகளின் காரணமாக இவ்வாறான நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக குற்றம் சுமத்தும் மனுதார்கள் அதனூடாக மக்களின் அடிப்டை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு உயர்நீதிமன்றில் கோரியுள்ளனர்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால்,கலாநிதி டப்ள்யூ.டி லக்ஷமன் மற்றும் மத்திய வங்கியின் நிதி சபை, ஜனாதிபதியின் முன்னாள் செயலர் பி.பி ஜயசுந்தர, கணக்காளர் நாயகம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் அதன் ஆணையாளர்கள் சட்டமாதிபர், உள்ளிட்ட 39 பேர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment