ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாக்க நான் பிரதமர் பதவியை ஏற்கவில்லை - ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாக்க நான் பிரதமர் பதவியை ஏற்கவில்லை - ரணில் விக்ரமசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே முன்வந்தேன். அதற்கான எனது பொருளாதார திட்டத்தை அடுத்த வாரம் முன்வைப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (18) புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதி சபாநாயகராக பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் நல்லது என்ற எனது கருத்தை நான் தெரிவித்திருந்தேன்.

2 வருடங்களுக்கு பின்னர் எனது பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டது போல், இன்னும் இரு வார கால அவகாசம் தந்தால் இந்த பக்கத்தையும் சரிப்படுத்திக் கொண்டு, அனைவருக்கும் ஒன்றாக பயணிக்க முடியும்.

அத்துடன் யாரையும் பாதுகாக்க நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டத்தின் பிரகாரம் செயற்பட முடியும். சட்டத்தின் அடைப்படையில் கிடைக்கும் தீர்ப்பின் பிரகாரமே எமக்கு செயற்பட முடியும்.

நான் தெரிவித்ததற்கு அமைய கலவரம் சம்பந்தமாக 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதனால் ராஜபக்ஷ் குடும்பத்தினரை பாதுகாக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதற்காக எனது பொருளாதார திட்டத்தை அடுத்த வாரம் முன்வைப்பேன். அதன் பின்னர் அது தொடர்பில் விவாதித்து முடிவுக்கு வரலாம். அதன் பின்னர் அரசியல் வேலைத்திட்டம் என்ன என்பதை தெரிவிக்கின்றேன்.

மேலும் 2018 இல் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள், நாங்கள் நாட்டை விற்பனை செய்வதாக தெரிவித்து வந்தனர். 2020 இல் இதனை நீங்களும் எனக்கு எதிராக பிரசாரம் செய்தனர். அதனால் நீங்கள் இரு தரப்பினரும் அந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள்.

எனவே நாங்கள் அனைவரும் பிழை செய்தவர்கள். அதனால் நாங்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரத்துக்கு செல்ல வேண்டும். இதனையே காலி முகத்திடலில் இருப்பவர்களும் தெரிவித்து வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment