(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் அமைச்சரவையை நியமிக்காமல் பாராளுமன்ற நடவடிக்கைகளை பிற்போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அமைச்சரவையை எப்போது அமைப்பது என்ற காலவரையறையை சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் (18) புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகளின் போது சபாநாயகரின் அறிவிப்பில், நிகழ்ச்சி நிரலில் இருக்கும் வாய் மூல விடைக்கான கேள்விகளை வேறு ஒரு தினத்துக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு செய்தார். இது தொடர்பில் விளக்கம் கேட்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தில் பிரதமர் உட்பட 5 அமைச்சர்கள் இருக்கின்றனர். அப்படியானால் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த அமைச்சர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதலளிக்க அவர்களுக்கு முடியும்.
அதேபோன்று அரசாங்கத்தின் அமைச்சரவையை எந்த காலகட்டத்தில் அமைப்பதென்று அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அமைச்சரவை நியமிக்கும் வரை வாய் மூல விடைக்கான கேள்விகளை வேறு தினத்துக்கு பிற்போடுவதாக தொடர்ந்து தெரிவிக்கும் நிலையே ஏற்படும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அமைச்சரவையை இந்த காலத்துக்குள் நியமிப்பதென்றும் அதுவரைக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களுக்கு உரிய கேள்விகளை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் சபைக்கு அறிவிப்பு செய்யவேண்டும்.
அரசாங்கத்தினால் அமைச்சரவையை நியமிக்க முடியாமல் இருப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்தி வைக்க முடியாது. அதனால் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை பிற்படுத்தாமல் அரசாங்கம் எப்போது அமைச்சரவையை நியமிப்பது என்பதை சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment