30 மில்லியன் ரூபா பண மோசடி : வெளிநாடு செல்ல தயாராகும் நாமல் : நீதிமன்றுக்கு அறிவிப்பதற்காக விசாரணைக்கு வருகிறது வழக்கு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

30 மில்லியன் ரூபா பண மோசடி : வெளிநாடு செல்ல தயாராகும் நாமல் : நீதிமன்றுக்கு அறிவிப்பதற்காக விசாரணைக்கு வருகிறது வழக்கு

(எம்.எப்.எம்.பஸீர்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அமைச்சுக்களில் இருந்து ராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ  வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றார். 

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (5) கொழும்பு மேல் நீதிமன்றில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. 

வெளிப்படுத்த முடியாத வகையில் 30 மில்லியன் ரூபா சம்பாதித்தார் என கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் சேர்த்து 6 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது இது  வெளிப்படுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  கவர்ஸ் கோப்ரேட் நிறுவனம்,  அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களான  இந்திக பிரபாத் கருணாஜீவ,  சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா,  நித்தியா செனானி சமரநாயக்க ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  வெளிநாடு செல்வதன் பொருட்டு நீதிமன்றை தெளிவுபடுத்துவதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு, நாமலின் சட்டத்தரணியான,  ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கொழும்பு மேல் நீதிமன்றில், நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில்  நேற்று (5) கோரிக்கை விடுத்தார். இதனூடாக நாமல் வெளிநாடு செல்ல தயாராகின்றமை வெளிப்படுத்தப்பட்டது.

 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கும் 2014 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்ரேட் செர்விஷஸ் நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்துடன் செய்த கொடுக்கல் வாங்கலின் போது, மோசடியான முறையில் பாரிய அளவில் பணத்தை பயன்படுத்த சதித்திட்டம் தீட்டியதாகவும்,  அதன் ஊடாக 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்ததாகவும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ்  11 குற்றச்சாட்டுக்களின் கீழ்  சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிப்படுத்த முடியாத வகையில் சம்பாதித்த 30 மில்லியன் ரூபா ஊடாக ஹலோ கோப் எனும் நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபரால் நாமல் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு  நேற்று (5) விசாரணைக்கு வந்தது. இதன்போதே நாமலின் சட்டத்தரணிகள் ஊடாக மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முதல் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷ மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக இதன்போது அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன தெரிவித்தார்.

இவ்வழக்கில் பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும்,  எந்த சத்தர்ப்பத்திலும் நீதிமன்றை தெளிவுபடுத்திய பின்னர் வெளிநாடு செல்ல அவருக்கு ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி  வெளிநாடு செல்வது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிப்பதற்காக இவ்வழக்கை  எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கோரினார்.  அதன்படியே மேற்படி அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment