சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை பெற்றுக் கொடுப்பதற்காக என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு இப்பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு உதவி புரிவேன்.
இவ்வாறு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாவயத்தில் நேற்று (06) சாய்ந்தமருது போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கான பிரதி பிரதம செயலாளர் ஏ.மன்சூரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சாய்ந்தமருது மக்கள் நீண்ட காலமாக தமக்கென தனியான நகர சபையொன்று வேண்டும் என்ற கோஷம் இந்தப் பிரதேச மக்களால் கோரப்பட்டு வருவதனை நான் நன்கறிவேன். இவர்கள் பல அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.
எனவே என்னால் முடிந்த வரையில் அந்த மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக அரசுடனும் அது சம்பந்தப்பட்ட அமைச்சுடனும் அதிகாரிகளுடன் கதைத்து சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை ஒன்றை பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது அந்த வேளையில் நான் இப்பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளருடன் இணைந்து விஷேடமாக கடமையாற்ற கூடிய ஒருவனாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்டிருந்தேன். அரசாங்க அதிபருக்குரிய சகல அதிகாரங்களும் எனக்கு வழங்கப்பட்டிருந்தது.
சுனாமி அனர்த்த்த்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சாய்ந்தமருது பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதுடன், அகாதி முகாம்களின் தங்கியிருந்தோரின் நலன்களிலும் கூடிய அக்கறை செலுத்தியிருந்தேன்.
பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தினையும் மீள கட்டியெழுப்புவதில் பிரதேச செயலாளருடன் இணைந்து இரவு பகலாக பாடுபட்டிருக்கின்றேன். அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் சாய்ந்தமருது மக்கள் எனக்கு புரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல இன மக்களுக்கு இடையில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரு அன்னியோன்யமான உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்கால சந்ததியினர் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் எந்த நாட்டிலும் அம்பாறை மாவட்டத்திலும் மிகவும் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதில் நான் நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கின்றேன்.
நான் அம்பாரை மாவட்ட செயலாளராக கடமையாற்றும் காலத்தில் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முன்னின்று உழைப்பேன் என்பதையும் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.
(மாளிகைக்காடு நிருபர்)
No comments:
Post a Comment