ஒமிக்ரோனை தொடர்ந்து மற்றுமொரு புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

ஒமிக்ரோனை தொடர்ந்து மற்றுமொரு புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா உள்ளிட்ட புதிய வகை பாதிப்புகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின.

ஒமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையே, இந்த இரண்டு வைரஸ்களும் கலந்த புதிதாக மேலும் பல உருமாற்ற வைரஸ்கள் உருவாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் டெல்டாக்ரோன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது.

இந்த வைரஸ் டெல்டா வகையின் மரபணு பின்னணியை ஒத்தும், ஒமிக்ரோனின் சில திரிபுகளையும் கொண்டுள்ளது.

இது தொடர்பில் சைப்ரஸில் உள்ள உயிரியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் கவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் டெல்டா மற்றும் ஒமிக்ரோனின் அம்சங்களை இணைக்கும் புதிய SARS-CoV-2 இன் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒமிக்ரோன் மற்றும் டெல்டா நோய்த்தொற்றுகள் உள்ளன, இதனிடையே இந்த இரண்டு வைரஸுகளும் கலந்து புதிய திரிபினை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

புதிய திரிபில் டெல்டா மரபணுவிற்குள் ஒமிக்ரோன் போன்ற மரபணு அடையாளம் காணப்பட்டதால் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்டாக்ரோன் என்று பெயரிடப்பட்டது என்று சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு இரசாயனவியல் ஆய்வகத்தின் தலைவருமான லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் கூறினார்.

சைப்ரஸில் இதுவரை 25 'டெல்டாக்ரோன்' தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் மற்றும் அவரது குழுவினர் கூறியுள்ளனர்.

சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெல்டாக்ரோன் என்ற புதிய வகை கொரோனாவுக்கு இதுவரை அறிவியல் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment