தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணத்தில் பிரதான கோரிக்கையாக அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் மாறிமாறியிருந்த அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் முஸ்லிம், மலையக் கட்சிகள் தமது மக்களின் அபிலாஷைகளை முழுமையாக உள்ளீர்க்க முடியாமையின் காரணமாக ஏற்பட்ட கரிசனைகளால் கையொப்பமிடுவதிலிருந்து பின்வாங்கியிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.
டிசம்பர் 29ஆம் திகதியிடப்பட்ட இந்த ஆவணத்தின் தலைப்பு,‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்று காணப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு பிரித்தானியரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து, தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களிடமிருந்தும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைக் கோரி வருகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமையானது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளின்படி அவர்களின் நியாயமான அபிலாஷைகளை அங்கீகரித்த ஒரு தீர்வைக் கோரியது.
தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்தின் உதவியோடும் தீர்வு காண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற விடயம் குறித்த ஆவணத்தின் முதற்பக்கத்தில் உள்ள முதலாவது பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்து, கடந்த 40 ஆண்டுகளாக இந்திய அரசு தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்கள் தமக்கான கௌரவம், சுய மரியாதை, பாதுகாப்பு, அமைதி ஆகயவற்றுடன் வாழ வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் ஒரு நியாயமான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வைக் காண்பதில் இந்தியா வெளிப்படுத்திய உறுதியான உறுதிப்பாட்டிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் 1993 இல் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழு, ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் காலத்தில் 2000ஆம் ஆண்டு ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றி அதிகாரங்களை பகிரும் வகையில் கொண்டவரப்பட்ட அரசியலமைப்பு திருத்ததம், 2002 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஒஸ்லோவில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006 இல் அமைக்கப்பட்ட சர்வ கட்சி மாநாட்டின் முன்மொழிவுகள், ஜனாதிபதி ராஜபக்ஷ, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும், அவற்றின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் வழங்கிய முக்கிய உறுதி மொழிகள், பின்னர் 2009 இல் போர் நிறைவுக்கு வந்தவுடன் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ முனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிவிப்பு, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கிய வாக்குறுதி, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் நரேந்திரமோடிக்கு வழங்கிய உறுதிமொழி ஆகிய விடயங்கள் உரிய சுட்டிக்காட்டல்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோடு அத்துடன் நிறுத்திவிடாது, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை காண்பதை நோக்கி கட்டியெழுப்பப் படவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் முழுமையான அதிகாரப் பகிர்வினை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக காணப்படுவதோடு அதில் இந்தியாவுக்கு இலங்கை வாக்குறுதிகளை அளித்துள்ளது என்பதும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கின் குடிப்பரம்பலை அடியோடு மாற்றும் நோக்கில், தமிழ் பேசும் மக்களின் காணிகள் தொடர்ந்தும் பல்வேறு காரணங்களின் கீழ் அரசால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகள் இல்லாது போய்விடும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பின்னர், நிரலிடப்படும் விடயங்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிகூடிய கரிசனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு, முதலாவதாக, அரசியலமைப்பில் உள்ளவாறாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இரண்டாவதாக, 1987ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கங்களின் அனைத்துப் பிரிவுகளும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இவற்றை அடுத்து இறுதிப் பந்தியில், தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாடு என்ற கட்டமைப்பிற்குள் சுய நிர்ணய உரிமைகளுமன் அவர்களின் வரலாற்று வாழ்விடங்களில், சுய மரியாதையுடனும், கௌரவத்துடனும் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனைவிடவும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆவணத்துடன் ‘இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுடைய அவசரமாக கரிசனைகள் கொள்ள வேண்டிய விடயங்கள்’ என்ற தலைப்பில் ஏழு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல், 16ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மொழி உரிமைகள், நிலஅபகரிப்பும் குடிப்பரம்பல் மாற்றமும் மற்றும் எல்லை மீள் நிர்ணயமும், சமத்துவமும் பிராஜாவுரிமையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கைதிகள், தேர்தல் முறை மாற்றம், ஒரேநாடு ஒரேசட்டம் என்ற கோட்பாடு என்பன அவையாகும்.
கேசரி
No comments:
Post a Comment