ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது போன்று தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் தோட்டங்களில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கும் தொழில் அமைச்சர் தலையிட வேண்டும் என எம். உதய குமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தும் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தக் கூடாது என்ற திருத்தங்களை நாங்கள் வரவேற்கிறோம். அது தொடர்பில் நான் பாராளுமன்றத்துக்கு தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து வலிறுத்தி இருந்தேன். அதற்கு ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி இருந்தனர்.
இதேபோன்று தொழில் செய்யும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகள் மற்றும் பாழியல் கொடுமைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னர் ஓய்வு பெறும்போது அவர்களுடைய ஈபிஎப் நிதியை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் இயற்றப்படும் சட்டங்களுக்கு பெருந்தோட்டத்துறை ஏற்புடையதா இல்லையா என்பதை அமைச்சர் சபையில் விளக்க வேண்டும்.
குறிப்பாக ஒரு நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நாட்டில் சட்டங்களை மதிக்காத ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இன பாகுபாடு உள்ள உறுப்பினர்கள் அதில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொழில் அமைச்சர் பிறப்பிக்கும் சட்டங்களை பெருந்தோட்ட கம்பனிகள் நடைமுறைப்படுத்துமா என்ற சந்தேகம் எழுகின்றது.
மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை தற்காலிக தொழிலாளர்களாக இணைத்துக் கொள்வதால் நீண்ட காலமாக நிறுவனங்களில் தொழில் செய்துவரும் இளைஞர்கள் நிரந்தரமாக்கப்படாமல் இருக்கின்றனர்.
இளம் வயதினரை தொழிலுக்கு அமர்த்தினால் அவர்களுக்கு ஈபிஎப், ஈடிஎப் வழங்க வேண்டும். அதனை இல்லாமலாக்கவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களை தற்காலிக தொழிலுக்கு அமர்த்துகின்றனர். இது குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment