(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த ஆயிரம் ரூபா சம்பளம் நீதிமன்ற நடவடிக்கையால் தடைப்பட்டிருக்கின்றது. அதனால் அடிப்படைச் சம்பள சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தொடர்பான வாக்குறுதியை வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தும் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும்போது, அதனை அடிப்படைச் சம்பளமாக வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருமாறு நாங்கள் அன்று தெரிவித்தோம். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் எந்த கம்பனிக்கும் அதனை நிராகரிக்க முடியாது.
ஆயிரம் ரூபா வழங்கியே ஆக வேண்டும். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு சம்பள நிர்வாகத்தில் திருத்தம் மேற்கொண்டது. அவ்வாறு செய்து சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளும்போது கம்பனிகளுக்கு நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியும் எனவும் நாங்கள் அன்று தெரிவித்திருந்தோம்.
ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது. அரசாங்கம் தெரிவித்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றதா? குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு கீழ் இருக்கும் தாேட்டங்களிலாவது இந்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதில்லை.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறுவதால், வழக்கு முடியும்வரை ஆயிரம் ரூபா தோட்டத் தொழிலாளர்ளுக்கு கிடைக்கப் போவதில்லை. அதனால் அடுத்த வருடத்தில் இருந்தாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அடிப்படை சம்பள சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் யாருக்கும் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது. இந்த வரவு செலவு திட்டத்திலாவது அது தொடர்பில் பிரேரணையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.
அதேபோன்று காப்புறுதி துறையில் 45 ஆயிரம் சேவகர்கள் இருக்கின்றனர். இதுவரை இந்த துறையினர் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து காப்புறுதி ஊழியர்களையும் ஈபிப். ஈடிப் கொடுப்பனவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment