(நா.தனுஜா)
அரசாங்கம் அதற்கு நெருக்கமான பௌத்த தேரர்களுக்குப் உயர் பதவிகளை வழங்கி, அதன் மூலம் தாம் விரும்பியவைகளைச் சாதித்துக் கொள்வதற்கு முற்படுகின்றது. இருப்பினும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் முக்கிய கட்டமைப்புக்களை தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியல் மயப்படுத்துவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இரசாயன உர இறக்குமதியை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஆகவே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் 'யூரியா' போன்ற சொற்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். அதன் காரணமாக இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரமே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் கூறுகின்றார்.
உண்மையில் அதுவும் ஒரு வகை இரசாயன உரமாகும். இவ்வாறான பொய்களை நம்பும் அளவிற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதியின்போது இடம்பெற்ற மோசடியையும் முழுமையாக மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதுமாத்திரமன்றி இம்மோசடி தொடர்பில் வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து, அவரை வாயடைக்கச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்று வலியுறுத்திய எமது கட்சியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமை உள்ளடங்கலாக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அடக்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஓரங்கமாகவே இதனையும் கருத வேண்டியிருக்கின்றது.
அதேவேளை 'நனோ யூரியா' உரத்தை 'நனோ நைட்ரஜன்' உரம் என்று பெயர் மாற்றம் செய்து நாட்டிற்குள் கொண்டுவந்ததைப் போன்று, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கழிவு உரமும்' விரைவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாட்டிற்குள் அனுமதிக்கப்படும்.
சீன உர இறக்குமதியின் மூலம் ஆளுந்தரப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் இலஞ்சம் (கையூட்டல்) பெற்றிருப்பதன் விளைவாகவே அந்தக் கப்பலைத் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாரும் முன்னெடுக்கவில்லை.
மறுபுறம் விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான நீர் தேவையானளவு உள்ளபோதிலும் உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கான பற்றாக்குறையின் விளைவாக விவசாயிகள் பயிரிடமுடியாத நிலையில் உள்ளனர்.
அரிசி இல்லாவிட்டால் மரவள்ளிக்கிழங்கை உண்ணுமாறு சமல் ராஜபக்ஷ கூறுகின்றார். ஆனால் இன்றளவிலே மரவள்ளிக்கிழங்கைக்கூட உற்பத்தி செய்ய முடியாத நிலையில் விவசாயிகளும் அதனைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் மக்களும் இருக்கின்றார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் நாட்டின் அனைத்துத் துறைகளும் மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் அதற்கு நெருக்கமான பௌத்த தேரர்களுக்குப் பதவிகளை வழங்கி, அதன் மூலம் தாம் விரும்பியவைகளைச் சாதித்துக் கொள்வதற்கு முற்படுகின்றது.
இருப்பினும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் முக்கிய கட்டமைப்புக்களை அரசாங்கம் அதன் தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியல் மயப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment