கூட்டு ஒப்பந்தத்தின் அவசியம் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது - ராமேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

கூட்டு ஒப்பந்தத்தின் அவசியம் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது - ராமேஸ்வரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கூட்டு ஒப்பந்தம் இல்லாதமையும் மக்கள் பாதிக்கப்பட பிரதான காரணமாகும். எனவே கூட்டு ஒப்பந்தத்தின் அவசியம் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற பெருந்தோட்ட அமைச்சு ,காணி அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் வருமானத்தில் பெரிய பங்குதாரராக உள்ள பெருந்தோட்ட துறையினர், கொவிட் வைரஸ் தொற்று காலத்திலும் இந்த நாட்டிற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருமானத்தை பெற்றுக் கொடுத்தனர்.

நாட்டில் ஏனைய துறைகள் வீழ்ச்சியடைந்த போதும் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பு அவசியமாக இருந்தது. பெருந்தோட்ட ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக கூறி, முரண்பாடுகளுக்கு மத்தியில் ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டது. எனினும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தேயிலை பறிப்பு மற்றும் மரங்களை வெட்டி வருமானத்தை ஈட்டுகின்ற வேலைகளை செய்து வருகின்றன.

இந்த நாட்டிற்கு பெருவாரியான பங்களிப்பை செய்யும் பெருந்தோட்ட மக்கள் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பாரிய கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் குறித்து எவரும் கருத்தில் கொள்ளவில்லை. அதேபோல் மலையகத்தில் தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளன, எனவே அந்த தரிசு நிலங்களை பயன்படுத்தி சுய தொழிலை உருவாக்கும் வேலைத்திட்டங்களை நிதி அமைச்சர் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தரிசு நிலங்களை உரிய தோட்ட இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுத்து அவர்களின் சுய தொழிலுக்கு ஊக்குவிக்க வேண்டும். நிறுவனங்களுக்கு நிலங்களை விற்க வேண்டாம், அவர்கள் வாக்குறுதிகளை மீறி தமது வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்.

அதேபோல் கூட்டு ஒப்பந்தம் இல்லாதமையும் மக்கள் பாதிக்கப்பட பிரதான காரணமாகும். எனவே கூட்டு ஒப்பந்தத்தின் அவசியம் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த தொழிலாளர் எமது மக்கள் செய்வார்களாக அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களின் எதிர்காலத்திற்காக சிறந்த வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment