“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தின் பிரகாரம் பசுமை விவசாயத்துக்கான புதிய ஜனாதிபதி செயலணி கோட்டாபயவினால் உருவாக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தின் பிரகாரம் பசுமை விவசாயத்துக்கான புதிய ஜனாதிபதி செயலணி கோட்டாபயவினால் உருவாக்கம்

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் அபிவிருத்தியடைந்த விவசாயப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புதல், எதிர்வரும் தசாப்தத்துக்குள் தேசிய மற்றும் சர்வதேச நுகர்வோருக்கு, நஞ்சற்ற விவசாய உற்பத்திகளைப் பெற்றுக் கொடுக்கச் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளல் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பயிர்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மண் மற்றும் நீருடன் கலக்கும் இரசாயனக் கழிவுகளைக் குறைத்துக் கொண்டு, வாழ்வாதார முறைமைகளின் ஊடாகச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஆரோக்கியமான பசுமை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதே, அரசாங்கத்தின் முதன்மைக் குறிக்கோளாக இருக்கின்றது.

நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி, சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பு மற்றும் சேதனப் பசளைப் பயன்பாட்டுடனான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல் மூலம், நிலையான பசுமை விவசாயத்தை நோக்கிப் பயணிக்க முடியும். இதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், பாதகமான வேளாண்மை இரசாயனங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானதும் தேசிய சுற்றுச்சூழல் நிலைமைகளுக்குப் பொருத்தமானதுமான சேதனப் பசளை உற்பத்திக்குத் தேவையான ஊக்கப்படுத்தல்களை வழங்குவதற்கான அவசியத்தைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் (15) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் பிரகாரம், மேற்படி ஜனாதிபதிச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

பசுமை விவசாயத்தை நிலையாகப் பேணுவதற்குரிய முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல், பல்வேறு பயிர்களுக்குத் தேவையான சேதனப் பசளையை அடையாளம் கண்டுகொள்ளல் மற்றும் அந்தப் பசளை உற்பத்தியை மேற்படுத்தல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளைத் தேசிய அளவில் உற்பத்தி செய்துகொள்ளல், தேசிய உற்பத்திகளின் ஊடாகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் போது ஏற்படக்கூடிய பற்றாக்குறையை, உயர் தரத்திலும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதியுடனும் வரையறுக்கப்பட்டளவில் இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் மேற்பார்வை முறைமைகளை அடையாளம் கண்டுகொள்ளல், சேதன உணவு உற்பத்திகள் மற்றும் நுகர்வு ஆரோக்கியம், சமூக மற்றும் பொருளாதாரப் பிரதிபலன்களை மக்கள் மயப்படுத்துவதற்கான தொடர்பாடல் நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் இந்த வேலைத்திட்டத்துக்காக அரச துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் கள ரீதியில் சேதன வேளாண்மை விரிவாக்கச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பொறுப்புகள் என்பன, இந்த ஜனாதிபதிச் செயலணியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment