நாட்டின் தேசிய பிரச்சினைகளைக் கூட்டிணைந்த முறையில் எதிர்கொள்வதற்கு இயலுமான பங்களிப்புக்களை வழங்குமாறு அரசு அழைப்பு - அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் - News View

Breaking

Sunday, September 12, 2021

நாட்டின் தேசிய பிரச்சினைகளைக் கூட்டிணைந்த முறையில் எதிர்கொள்வதற்கு இயலுமான பங்களிப்புக்களை வழங்குமாறு அரசு அழைப்பு - அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள்

(நா.தனுஜா)

அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் புதிய பொறிமுறையொன்றைக் கையாள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் அதேவேளை, நாட்டின் தேசிய பிரச்சினைகளைக் கூட்டிணைந்த முறையில் எதிர்கொள்வதற்கு இயலுமான பங்களிப்புக்களை வழங்குமாறு தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக நாட்டின் முக்கிய அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளான வணக்கத்திற்குரிய கலுபஹன பியரடன, அருட்தந்தை ஆசிறி பெரேரா, அருட்தந்தை சி.ஜி.ஜெயக்குமார், ரோஹன ஹெட்டியாராச்சி, கலாநிதி ஜோ வில்லியம், கலாநிதி தயானி பனகொட, விசாகா தர்மதாஸ, ஜாவிட் யூசுப், பேராசிரியர் ரி.ஜயசிங்கம், பேராசிரியர் டுடோர் சில்வா, ஹில்மி அஹமட், வி.கமலதாஸ், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சாரா ஆறுமுகம், கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும் சஞ்சீவ விமலகுணரத்ன ஆகியோர் ஒன்றிணைந்து அதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களினதும் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது நல்லிணக்கம் தொடர்பில் புதிய பொறிமுறையொன்றைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவாக எடுத்துரைத்தார்.

அத்தோடு நாட்டின் தேசிய பிரச்சினைகளைக் கூட்டிணைந்த அடிப்படையில் கையாள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், அதற்கான பங்களிப்பை வழங்குவதற்கு முன்வருமாறு சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்போது நாம் அமைச்சரிடம் முக்கியமான அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றையும் கையளித்தோம் என்று மேற்படி அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேலே பெயர் குறிப்பிடப்பட்ட பிரதிநிதிகளால் வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

அரசசார்பற்ற அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படல் மற்றும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுதல், சோதனை நடவடிக்கைகளுக்காக முன்னறிவிப்பின்றி அரச சார்பற்ற அமைப்புக்களின் அலுவலகங்களுக்குள் அரச அதிகாரிகள் உள்நுழைதல் உள்ளடங்கலாக அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுதல் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பவை ஜனநாயக அரசின் ஓர் அங்கம் என்பதுடன் குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் சமூகத்தின் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தல், உணவுப் பொருட்களை வழங்குதல் உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை முன்னிறுத்தி தமது பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றன' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பொறுத்தமட்டில், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு அதன் மோசமான சரத்துக்களைத் தளர்த்தித் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதுடன் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தப்படுவதைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் இன்னமும் வழக்குகள் நிலுவையிலுள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கைப்பற்றப்படுதல் மற்றும் சந்தேகத்திற்கிடமான தொல்பொருள் அகழ்வாராய்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளமை, தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் நிர்வாக மட்டங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படாமை, சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சமவாயச் சட்டத்தின் தவறான பயன்பாடு, தேசிய ரீதியான நிகழ்வுகளின்போது தாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படுதல் மற்றும் சிறுபான்மையின சமூகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் அடுத்த கட்ட செயற்பாடுகள் எத்தகையதாக அமையும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள பதில் அறிக்கையின் 14 ஆம் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment