சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அறிவித்தல் - News View

Breaking

Saturday, September 18, 2021

சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அறிவித்தல்

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றுக்கான வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாளை மறுதினம் திங்கட்கிழமை சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

திங்களன்று காலை 9.00 மணிக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு, நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக இந்த அறிவித்தல் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தான் தயார் எனினும், விசாரணை விடயம் குறித்து அறிவித்தலில் தெரிவிக்கப்படாமையால் அது தொடர்பில் சட்ட ஆலோசனையைப் பெற்று ஆஜராவது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜேகுணவர்தன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய செயற்படவுள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடந்த நான்காம் திகதி ஊடக சந்திப்பொன்றினை நடாத்தியிருந்த மனுஷ நாணயக்கர, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்னவின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment