தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய, சித்திரவதைக்கு உட்படுத்திய இராஜாங்க அமைச்சர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? - கஜேந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய, சித்திரவதைக்கு உட்படுத்திய இராஜாங்க அமைச்சர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? - கஜேந்திரகுமார்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்திய இராஜாங்க அமைச்சர் எந்தவொரு அமைச்சுப் பதவிவையும் வகிக்காது இருப்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? அதேபோல் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைக்கு எவ்வித காலதாமதமும் இன்றி மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை நீதி அமைச்சர் உடனடியாக எடுப்பாரா? அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வி எழுப்பினார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று பாராளுமன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் 27/2இன் கீழ் விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

இதன்போது அவர் கூறுகையில், கடந்த 12/09/21 அன்று மாலை 6 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவிநிலை அதிகாரத்தை பயன்படுத்தி அனுராதம் சிறைச்சாலைக்கு சென்றதுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.

இவ்வாறு பத்து தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்துள்ளதுடன் அவர்களை தனக்கு முன்னாள் முழந்தாலிட பணித்துள்ளதுடன் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு அவர்களை அச்சுறுதியுமுள்ளார்.

தனக்கு இந்த அமைச்சு பதவியை வழங்கி வைத்தபோது, இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கும் அதேபோல் சுட்டுக் கொள்வதற்கும் தனக்கு முழுமையான அதிகாரம் இருப்பதாகவும் சத்தமிட்டு அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளார்.

கட்டுப்படுத்த முடியாதளவிற்கு ஆவேசமாக நடந்த இராஜாங்க அமைச்சர், தனது கைத்துப்பாக்கியை இரு தமிழ் கைதிகளின் தலையில் வைத்து மீண்டும் மீண்டும் அழுத்தி அவர்கள அந்த இடத்திலேயே சுட்டுக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி இருந்தார்.

சிறைச்சாலைக்கு பொறுப்பான அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, தன்னிலைமீறி ஆத்திரத்துடன் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை சமாதானப்படுத்தி, அவ்விடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்துள்ளனர்.

மிகுந்த எத்தனத்தின் பின்னர் அவர் சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார். இதன்போது, அந்த சிறைக் கைதிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன அழுத்தம் அச்சுறுத்தல் குறித்து நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

இது குறித்து தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் எனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளேன்.

அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது குறித்த காரணிகளை வெளிப்படுத்தியிருந்தேன். பின்னர் நானும் எனது கட்சி உறுப்பினரும் சிறைச்சாலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தோம்.

இந்த சம்பவங்களின் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது அமைச்சுப் பதவியை துறப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இருந்து அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

சிறைக் கைதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச சட்டங்களான மனித உரிமைகளிற்கான சர்வதேச பிரகடனம், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச சாசனம் (ICCPR ), சித்திரவதை மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், மனிதத்துவம் அற்ற கீழ்நிலைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் சித்திரவதைகளிற்கு எதிரான சாசனம் போன்றவற்றில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

அதேபோல் நெல்சன் மண்டேலா சட்டம் என பொதுவாக அறியப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறைக் கைதிகளை பரிபாலனை தொடர்பிலான ஆகக் குறைந்த நியமங்கள் (SMR) குறித்த சட்டம் மற்றும் அதனோடு இணைந்த பிற சர்வதேச சட்ட நியமங்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன.

அத்தோடு, சிறைக் கைதிகள் தமது வீடுகளுக்கு அண்மையாக உள்ள சிறைச்சாலைகளில் வைத்துப் பராமரிப்பதையும் மேற்கூறிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. இந்த பின்புலத்தில், பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன்.

குறித்த நபரினால் இழைக்கப்பட்டுள்ள குற்றவியல் நடத்தையின் பரிமாணத்தின் அடிப்படையில் அவர் சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் விவகார அமைச்சராக இருப்பதற்கு மட்டுமல்ல, எந்தவொரு அமைச்சுப் பதவியையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையோ வகிக்க முடியாது.

அரசாங்கம் தயவுசெய்து இவர்களை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment