ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பிலிருந்து இலங்கை விலக முடிவு! - News View

About Us

About Us

Breaking

Friday, August 13, 2021

ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பிலிருந்து இலங்கை விலக முடிவு!

ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இலங்கை விலகுவதற்கு முடிவு செய்துள்ளது.

தேசிய கரப்பந்தாட்ட அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் எட்டு பேர் டெங்கு தாக்கத்துக்கும் உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகததாச ஹோட்டலில் தங்கியிருந்த தேசிய கரப்பந்தாட்ட (ஆண்கள்) அணியில் மொத்தம் 20 வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி அணியின் பயிற்சி தொடங்கிய பிறகு ஆறு வீரர்களும் பயிற்சியாளர் ஒருவருக்கும் கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 20 வீரர்களும் பயிற்சியாளர்களும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான சிகிச்சைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், வீரர்களிடம் மேற்கொண்ட அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைகளில் எட்டுப் பேர் டெங்கு பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த நோயாளிகள் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.

16 அணிகள் பங்குகொள்ளும் ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் செப்டெம்பர் 12 முதல் 19 ஜப்பானின் சிபாவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment