கொட்டகலை சுரங்க பாதையில் நீர் கசிவு - பெரும் அபாயத்தை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 4, 2021

கொட்டகலை சுரங்க பாதையில் நீர் கசிவு - பெரும் அபாயத்தை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிப்பு

கொட்டகலை சுரங்க பாதை ஆபத்தை ஏற்படுத்தும் இடமாக மாறிவருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹற்றன் / நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஒரு இடமாக மாறி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

குழாயில் நீர் ஊற்றுவதை போல் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுரங்க பாதையில் தொடர்ச்சியாக நீர் கசிவதனால் வீதி வழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நீர் மேலிருந்து கீழ் நோக்கி விழுவதனால் மோட்டர் சைக்கிளில் மற்றும் நடந்து செல்பவர்கள் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளன. 

சுரங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளில் நீர் கசிவதனால் தற்போது மின் குமிழ்கள் செயலிழந்து பெரும் இருட்டாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிக சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இதேவேளை இந்த ஆட்சி ஆரம்பித்த காலப்பகுதியில் இளைஞர்கள் யுவதிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பாரிய அளவில் நிதியினை செலவு செய்து தீட்டிய ஓவியங்கள் தற்போது நீர் கசிவு காரணமாக அழிவடையும் நிலையினை எட்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக நீர் கசிவதனால் சுரங்கத்தின் உறுதி சீர்குலைந்து இடியும் ஆபத்தினையும் எதிர்நோக்கலாம் எனவும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;.

அண்மையில் கூட குறித்த சுரங்கப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் விசேட நிருபர்

No comments:

Post a Comment