இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.ஏ.சி.1 விக்ராந்தின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.ஏ.சி.1 விக்ராந்த் இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தாக்குதல்களுக்கு பலம் சேர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க் கப்பலாகும்.
இந்தக் கப்பலைத் தயாரிக்க கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபா செலவிடப்பட்டு கப்பல் கட்டுமான பணிகள், கேரள மாநிலம் கொச்சியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான, இந்தக் கப்பலின் வெள்ளோட்டம் கடந்த நான்காம் திகதி கொச்சியில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இந்த வெள்ளோட்டம் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக, கப்பலின் செயற்றிறன், உந்து சக்தி, மின் உற்பத்தி, விநியோகம், துணை உபகரணங்கள் சோதனை உள்ளிட்டவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
262 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும், 40 ஆயிரம் தொன் எடையையும் கொண்டுள்ள இந்த போர்க் கப்பலில் 2,300 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதோடு, மொத்தமாக 14 தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரே நேரத்தில் 1,700 இராணுவ வீரர்கள் தங்கக் கூடியதாகவும், அதிகபட்சமாக 32.2 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த கப்பலானது 7,500 மைல்கள் வரை நிற்காமல் செல்லும் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விக்ராந்த், ஏற்கனவே இந்தியாவின் செயற்பாட்டில் இருக்கும் விக்ரமாதித்யாவுடன் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக உள்ளது.
விக்ரமாதித்யா 44.500 தொன்கள் எடை கொண்ட கப்பலாகும். இதில் நவீன 34 போர் விமானங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment