ஓட்டமாவடி - மஜ்மா நகரில் 1,437 உடல்கள் அடக்கம் : இடப்பற்றாக்குறை என்கிறார் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

ஓட்டமாவடி - மஜ்மா நகரில் 1,437 உடல்கள் அடக்கம் : இடப்பற்றாக்குறை என்கிறார் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 1,437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஒட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யும் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் அவசரக்கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று (09) திங்கட்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணி ஒட்டமாவடி பிரதேச சபையினால் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரேயொரு இடம் ஒட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியான மஜ்மா நகர், சூடுபத்தினசேனை பகுதியாகும்.

கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் அனைத்து சமூகங்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் 1,437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 1,348 முஸ்லிம்களின் உடல்களும், 40 இந்துக்கள், 28 கிறிஸ்தவர்கள், 21 பௌத்தம் ஆகிய தேசிய ரீதியில் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உடல்களை அடக்கம் செய்யும் பணியானது ஓட்டமாவடி பிரதேச சபையினர், சுகாதாரத் திணைக்களத்தினர், இராணுவத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புக்கள் மூலம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் உடல்களை அடக்கம் செய்வதற்கு மூன்று ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் உடல்கள் அடக்கம் செய்து வந்த நிலையில், இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி ஐந்து ஏக்கர் காணியில் தேசிய ரீதியிலுள்ள அனைத்து சமூகங்களுடைய உடல்களையும் அடக்கம் செய்து வருகின்றோம்.

ஆனால், குறித்த ஐந்து ஏக்கர் காணியில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிலும் இன்னும் உடல்களை அடக்கம் செய்ய இடம் போதாமையாகவுள்ள நிலையில் சமூக மட்ட அமைப்புக்கள், அரசியல் தலைமைகள், முன்னாள் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment