ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படாத அரச காணிகள் பணக்கார்கள் சிலருக்கு வழங்கப்படுகிறது - சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படாத அரச காணிகள் பணக்கார்கள் சிலருக்கு வழங்கப்படுகிறது - சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு மற்றும் சன்னார் பகுதிகளில் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படாத அரச காணிகள் பணக்கார்கள் சிலருக்கு வழங்கப்படுவதாக சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று புதன்கிழமை (7) காலை 10 மணியளவில் மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சன்னார் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ராமசாமி ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இன்றுவரை பெரியமடு, சன்னார் கிராமத்திலேயே வாழ்ந்து வருகின்றோம். நாம் வசிக்கும் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரச காணிகள் இருந்த போதும் எமக்கான அரை ஏக்கர் விவசாய காணிகள் கூட இல்லை. வாழ்வாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இங்கு ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான அரச காணிகளை சில அரசு அதிகாரிகளோடு சேர்ந்து வசதி படைத்தவர்களும் அபகரித்து வருகின்றனர். இந்த செயற்பாட்டுக்கு சில அரச அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

மேலும், அந்த அரச அதிகாரிகளால் எங்களுடைய வாழ்வாதாரமும் பிள்ளைகளின் கல்வியும் சீரழிந்து கொண்டிருக்கிறது.

அத்தோடு, பெரியமடு, சன்னார் பகுதியில் அரச காரணிகளாக இருக்கும் அனைத்தையும் அங்கு உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

குறித்த ஊடக சந்திப்பில் சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment