உருவாகியது 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பு : நாம் மிகச்சரியான அத்திவாரத்தை உருவாக்கினால் அடுத்துவரும் சந்ததியினர் அதனை உரியவாறு கட்டியெழுப்புவார்கள் - அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

உருவாகியது 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பு : நாம் மிகச்சரியான அத்திவாரத்தை உருவாக்கினால் அடுத்துவரும் சந்ததியினர் அதனை உரியவாறு கட்டியெழுப்புவார்கள் - அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் மங்கள சமரவீர

(நா.தனுஜா)

நாடு தற்போது மிகவும் மோசமானதொரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீட்சி பெற வேண்டுமெனின் இனியும் குறுகிய அரசியல் நோக்கங்களை நம்பாமல், உண்மையான தேசப்பற்று என்றால் என்னவென்பதை சாதாரண பொதுமக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே இனியும் தாமதிக்காமல் இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பு அதனை இலக்காகக் கொண்டு செயற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' அமைப்பின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான கரிநாளாகக் கருதப்படும் 'கறுப்பு ஜுலை' இனக்கலவரங்கள் இடம்பெற்று 38 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலேயே நாம் 'உண்மையான தேசப்பற்றாளர்கள்' சார்பில் இந்த முதலாவது ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடாத்துகின்றோம்.

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு வழிவகுத்த மிக முக்கிய காரணியாக 'கறுப்பு ஜுலை' இனக் கலவரங்களைக் குறிப்பிடமுடியும். இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், ஜப்பானுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது.

இலங்கையைப் போன்று சிங்கப்பூரை மாற்றியமைக்க வேண்டும் என்று லீ குவான் யூ கூறுமளவிற்கு அனைத்துத் துறைகளிலும் எமது நாடு சிறந்து விளங்கியது. அவ்வாறு சிறந்து விளங்கிய, இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட எமது நாடு இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக மோசமான வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி சர்வதேசத்தின் மத்தியில் தனித்து விடப்பட்ட தோல்வியடைந்த அரசாகவும் இலங்கை மாறியிருக்கின்றது.

நாளைய தினம் ஒரு பில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்த வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு இருக்கின்றது. அது கடந்த 2011 ஆம் ஆண்டில் பெறப்பட்ட கடனாகும். அதேபோன்று இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் அபிவிருத்திப் பிணையங்களுக்காக மேலும் 1.3 பில்லியன் டொலர் நிதியை மீளச் செலுத்த வேண்டியுள்ளது.

எமது நாட்டின் வரலாற்றிலேயே முன்னொருபோதுமில்லாத வகையில் கடந்த வருடம் பெருளவான நிதி மத்திய வங்கியினால் புதிதாக அச்சடிக்கப்பட்டது. நாம் மிகவும் மோசமானதொரு நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். சிம்பாவே, வெனிசுலா போன்ற நாடுகளுக்கு நேர்ந்த கதி எமக்கும் நேர்வதற்கான வாய்ப்புக்கள் தெளிவாகத் தென்படுகின்றன.

நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. பொருட்களின் விலைகள் பெருமளவிற்கு அதிகரித்திருக்கின்றன. எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான டொலர் இல்லை. அதனால் வெகுவிரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

கடந்த பல வருட காலங்களாக மிகக்குறுகிய அரசியல் நோக்கங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்று வந்த ஆட்சி நிர்வாகத்தின் காரணமாகவே எமது நாட்டிற்குப் படிப்படியாக இவ்வாறான நிலையேற்பட்டிருக்கின்றது.

இதுவரையான காலமும் நாட்டை ஆண்ட ஆளுங்கட்சிகள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த பொதுமக்களும் நான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் இந்த நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று அண்மைக் காலத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்து விட்டார் என்பதைக் குறிக்கும் 'சேர் ஃபெயில்' என்ற வாசகம் முக்கிய பேசு பொருளாகியிருக்கின்றது. ஆனால் உண்மையில் அவரும் அவரது அரசாங்கமும் பிரதிநிதித்துவம் செய்கின்ற இன, மதவாத ஏகாதிபத்திவாதக் கொள்கைகளே தோல்வியடைந்திருக்கின்றன. அதேபோன்று அதற்கு நடைமுறைச்சாத்தியமற்ற மாற்றுயோசனைகளை முன்வைக்கின்ற எதிர்க்கட்சியும் தோல்வியடைந்திருக்கின்றது.

எனவே தற்போது நாடு மிகவும் மோசமானதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீட்சி பெற வேண்டுமெனின் இனியும் குறுகிய அரசியல் நோக்கங்களை நம்பாமல், உண்மையான தேசப்பற்று என்றால் என்னவென்பதை சாதாரண பொதுமக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இளைஞர் சமுதாயம் இப்போதிருந்தே முன்னெடுப்பது அவசியமாகும்.

இனவாதத்தின் பெயரால் 'கறுப்பு ஜுலை' கலவரம் போன்றதொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்கி சிறுபான்மை மக்களை உயிருடன் எரிப்பது தேசப்பற்று அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு சிலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்தக் கலவரத்தினால் நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களும் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்தார்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இனியும் தாமதிக்காமல் சமூகத்தின் மத்தியில் இது குறித்த கலந்துரையாடலையும் தர்க்கத்தையும் இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

அதேவேளை இப்போது நாம் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கிளர்ந்தெழத் தேவையில்லை என்பதையும் கொள்கையை மையப்படுத்திய செயற்திட்டமொன்றை வகுப்பதே தற்போதைய தேவையென்பதையும் அனைவரும் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் கடந்த காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்கள் அனைத்தும் 'அனைவரும் இலங்கையர்கள்' என்ற அத்திவாரமின்றியே கட்டியெழுப்பப்பட்டன. அதனால் அவையனைத்தும் சில காலத்திற்குள்ளாகவே தகர்ந்துபோய்விட்டன.

ஆகவே இப்போது நாமனைவரும் இணைந்து மிகச்சரியான அத்திவாரத்தை உருவாக்கிக் கொடுத்தால், அடுத்துவரக் கூடிய சந்ததியினர் அதனை உரியவாறு கட்டியெழுப்புவார்கள். எனவே அதற்கான நாம் சுதந்திரத்தை மையப்படுத்திய தளமொன்றை உருவாக்க வேண்டும். இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் 'உண்மையான தேசப்பற்றாளர்களாகிய' எம்முடன் இணைந்து கொள்ள முடியும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

No comments:

Post a Comment