புவனேஷ்வர் குமாரின் அசத்தலான பந்து வீச்சுடன் 38 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

புவனேஷ்வர் குமாரின் அசத்தலான பந்து வீச்சுடன் 38 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கைக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தவான் தலைமையிலான சுற்றுலா இந்தியா, இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு ஆரம்பமானது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தசூன் சானக்க களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன்படி பிரித்வி ஷா, சமீர பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் மினோட் பானுகவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் இந்திய அணியினர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை குவித்தது இந்தியா.

அணி சார்பில் அதிகபடியாக சூர்ய குமார் யாதவ் 34 பந்துகளில் 50 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 36 பந்துகளில் 46 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 14 பந்துகளில் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியேர் தலா 2 விக்கெட்டுகளையும், சமித கருணாரத்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

165 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக சரித் அசலங்க 26 பந்துகளில் 44 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 23 பந்துகளில் 26 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இந்தியா சார்பில் புவஷே்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், குருணல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக புவனேஷ்வர் குமார் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளதுடன், இரண்டாவது டி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment