கொவிட் தொற்றினால் ஒருவேளை உணவை மாத்திரம் உண்டு வாழும் மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்து எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

கொவிட் தொற்றினால் ஒருவேளை உணவை மாத்திரம் உண்டு வாழும் மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்து எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித்

(எம்.மனோசித்ரா)

வரலாற்றில் வெட்கக் கேடானதும் மிகவும் இழிவானதுமான வகையில் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. கொவிட் தொற்றின் காரணமாக ஒருவேளை உணவை மாத்திரம் உண்டு வாழும் மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பொறுப்பற்ற வகையில் எடுத்துள்ள இந்த தீர்மானம் குறித்து இரு தடவைகள் சிந்திக்காது உடனடியாக அதனை இரத்து செய்து எரிபொருள் விலையைக் குறைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் காணப்படும் அதிகார போராட்டங்கள் அரசாங்கத்திற்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த அதிகார போராட்டத்திற்கு அப்பாவி மக்களை இரையாக்காமல் தடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றில் வெட்கக் கேடானதும் மிகவும் இழிவானதுமான வகையில் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது நாட்டில் தற்போது பாரிய சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது. 

இந்த தீர்மானத்தை எடுத்தது யார் என்று கூட தெரியாதளவிற்கு அரசாங்கம் நகைப்பிற்குரியதாகியுள்ளது. தம்மால் ஒருமித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவ்வாறில்லை என்று அறிவித்து ஒருவர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்துவதற்கு அரசாங்கத்திலுள்ள பிரதான தரப்பினர் முயற்சிக்கின்றனர். இவர்களது உள்ளக அதிகார போராட்டத்தினால் இறுதியில் பாதிக்கப்படப்போவது மக்களே. 

அரசாங்கத்தினால் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. அரசாங்கத்திற்குள் காணப்படும் அதிகார போராட்டங்கள் அரசாங்கத்திற்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த அதிகார போராட்டத்திற்கு அப்பாவி மக்களை இரையாகாமல் தடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது.

எனவே அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள இந்த பாதகமான தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அவ்வாறன்றி வெறும் ஊடக பிரசாரங்களால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. இது போன்ற கீழ் மட்டத்திலான கேலிகள் கடந்த இரு ஆண்டுகளில் மக்களுக்கு காண்பிக்கப்பட்டமை போதுமானது.

கொவிட் தொற்றின் காரணமாக ஒருவேளை உணவை மாத்திரம் உண்டு வாழும் மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பொறுப்பற்ற வகையில் எடுத்துள்ள இந்த தீர்மானம் குறித்து இரு தடவைகள் சிந்திக்காது உடனடியாக அதனை இரத்து செய்து எரிபொருள் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

No comments:

Post a Comment