யூதர்கள் போன்று தமிழர்கள் தங்களது இலக்கை அடைவார்களா ? இலங்கைக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் தமிழர்களுக்கு சாதகமா ? - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

யூதர்கள் போன்று தமிழர்கள் தங்களது இலக்கை அடைவார்களா ? இலங்கைக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் தமிழர்களுக்கு சாதகமா ?

ராஜபக்சாக்களின் ஆட்சி காலத்தில் தமிழர் விவகாரத்தின் மூலம் இலங்கையை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயல்வதும், பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவைகளை கைவிடுவதும் மேற்கு நாடுகளின் அரசியலாகும்.

பொது எதிரியான சீனா இலங்கையில் ஆழமாக காலூன்றியதன் காரணமாக இலங்கையை பணியவைக்கும் நோக்கில் தமிழர் விவகாரத்தை மேற்கு நாடுகள் கையிலெடுத்துள்ளது.

அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணமானது தமிழர்களின் தாயகம் என்று அங்கீகரித்துள்ளது.

அதுபோல் 10.06.2021 இல் ஐரோப்பிய பாராளுமன்றம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அதில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டமானது பல்வேறு குறைபாடுகள் கொண்டது என்றும், எந்தவித விசாரணைகளுமின்றி சமூக பணியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தவர்கள் என ஏராளமானோர் ஆட்சியாளர்களின் அரசியல் நலனுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்படாமல் தடுத்து வைத்திருப்பதனை ஐரோப்பிய பாராளுமன்றம் கண்டித்து ஐந்து பக்கங்கள் கொண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இதில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், அஹ்னாப் ஜெசீம் ஆகியோர்களின் பெயர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது 2009 இல் நடைபெற்ற யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகளினால் இலங்கைக்கு எதிராக 2021.03.23 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதற்கான நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்களின் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நீதி கோரி மனம் தளராமல் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட போராட்டங்களும், தியாகங்களும், விடாமுயற்சியுமே சர்வதேசத்தின் காதுகளை சென்றடைந்துள்ளது.

என்னதான் இருந்தாலும் மேற்கு நாடுகளின் சுயநல அரசியல் இதில் குவிந்து கிடக்கின்றது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்பு மைத்ரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் மேற்கு நாடுகளை அனுசரித்து சென்றதன் காரணமாக இந்த விவகாரத்தில் மேற்கு நாடுகள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை.

மீண்டும் ராஜபக்சாக்கள் ஆட்சி அமைத்ததன் பின்பு இலங்கையானது சீனாவுக்காக முற்றாக திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்பின்புதான் மனித உரிமை பேரவை, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கு நாடுகளின் அனைத்து சக்திகளும் இலங்கைக்கு எதிராக களம் இறங்கியுள்ளது.

இது தமிழர்களுக்கு ஓர் சாதகமான சூழ்நிலையாகும். துருக்கி தலைமையிலான ஓட்டோமான் இஸ்லாமிய பேரரசு பிரித்தானியா தலைமையிலான நேச நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததன் காரணமாக அன்றைய அரசியல் சூழ்நிலையை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக நன்கு பயன்படுத்தினார்கள்.

அதுபோல் இன்று இருக்கின்ற அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்துவார்களா என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

அன்று பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் உதவியுடன் பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்னும் யூத ராஜ்யத்தினை உருவாக்கியது போன்று அதே நாடுகளின் உதவியுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான உரிமையினை பெற்றுக்கொள்வார்களா என்பதுதான் இன்று பெரும்பாலான தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் எழுகின்ற கேள்வியாகும்.

அதுபோல் இன்றயை அரசியல் சூழ்நிலையில் சீனாவை துரும்பாக பயன்படுத்தினால், மேற்கு நாடுகளின் உதவியுடன் தமிழர்கள் தங்களுக்கான அதிகபட்ச உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment