பயணத்தடையால் மக்கள் முடங்கியிருப்பதால் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..! - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

பயணத்தடையால் மக்கள் முடங்கியிருப்பதால் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகள்..!

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று பரவலின் காரணமாக முழு உலகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பயணக்கட்டுப்பாடுகள், புதியதொரு வழமையான நிலை (நியூ நோர்மல்), தனிமைப்படுத்தல் மற்றும் சுயதனிமைப்படுத்தல் என பல்வேறு புதிய விடயங்களுக்கு பழகிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியிலும் கொவிட் தொற்றினால் மக்களின் உயிர், வாழ்வாதாரம், பொருளாதாரம் என அனைத்துமே பாரதூரமாக வீழ்ச்சி கண்டுள்ளன. இவ்வாறான சூழலில் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் ஒரு புறமிருக்க மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதால் வன்முறைகள் அதிகரிக்கும் சம்பவங்கள் மறுபுறத்தில் அதிகரித்து வருகின்றன.

தொற்றுநோய்க்கு முன்னரான காலத்தில்கூட, வீட்டு வன்முறையானது மனித உரிமைகளுக்கெதிரான பொதுவான மீறல் என உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் பயணத் தடைகளை விதித்து, வீடுகளில் இருக்கும்படியும் வீடுகளிலிருந்து பணியாற்றும் படியும் அறிவுறுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு செல்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஏற்பாடுகள் வீட்டு வன்முறைகள் பன்மடங்கு அதிகரிப்பதற்கான காரணியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாதளவு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 2020 மார்ச் மாதத்திலிருந்து கொவிட் தொற்று ஆரம்பமானது. இந்த காலகட்டத்திலிருந்தே வீட்டு வன்முறைகளுக்கு எதிராக ஆதரவளிக்க வேண்டிய சேவைகளுக்கான கோரிக்கை அதிகரித்து வந்துள்ளது. அதற்கு தேசியமட்ட செயலணியின் அங்கத்தவர்கள் பல்வேறு மட்டங்களில் பதிலளித்தும் வருகின்றனர்.

இதற்கு தீர்வாக அரசாங்கம் 1938 என்ற துரித தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு வரும் அழைப்புக்களுக்கு பதிலளிக்கத் தவறுமிடத்து, அவை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்பதோடு, இறுதி விளைவு மரணமாகக்கூட இருக்கலாம்.

எனவே தொற்றுநோய் தொடர்பிலான முடக்குதல்களின் போது வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உடனடிக் கவனத்திற் கொள்ளும்படி இலங்கையிலுள்ள பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான தேசியமட்ட செயலணி வலியுறுத்தியுள்ளது.

வீட்டு வன்முறை தடுப்பிற்கான சட்ட ஏற்பாடுகள்
2005 இன் வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றச் செயலினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்கும் சட்டம் இல.4/2015 ஆகியவற்றில் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்ட ரீதியான கடப்பாடுகள் காணப்படுகின்றன.

முறைப்பாடுகள் உதாசீனப்படுத்தப்படக்கூடாது
தற்போதுள்ள சவால் யாதெனில் இவ்வாறான சம்பவங்களுக்கு முன்னிலையில் ஆதரவை வழங்குபவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியதும் செயற்றிறனானதுமான பதிலளிப்புகளை துரிதமாக வழங்குவதாகும். மாறாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் உதாசீனப்படுத்தப்படுமாயின் அதுவும் மோசமான இறுதி விளைவையே தோற்றுவிக்கும்.

எனவே சட்ட அமுலாக்க மற்றும் சமூக சேவைகளிலுள்ள அதிகாரிகள், நாட்டின் நீதித்துறை, அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் பதவி வகிப்பவர்கள் வீட்டு வன்முறைகளை முற்றாக தவிர்ப்பதற்கும் , அவற்றினால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தீர்வுகள் யாவை?
வீட்டு வன்முறை குறித்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்டோர் மீளவும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளல், பாதுகாப்பு வழங்கல் என்பவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வீட்டு வன்முறைகள் குறித்து துரிதமாக முறைப்பாடளிப்பதற்கு இணையவழி நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பொலிஸாரின் பாதுகாப்புடன் இது குறித்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். நாட்டின் நீதித்துறை ஊடாக இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது உசிதமானதாக அமையும்.

இக்காலகட்டத்தில் அனுபவிக்கப்படும் வன்முறையின் தாக்கமானது நீண்டகால சமூக-பொருளாதார தாக்கத்தினையும் தலைமுறை கடந்த விளைவுகளையும் கொண்டிருக்கலாம். உதவிகள் தேவைப்படுவோருக்கு அவ்வாறான தகவல்களும் ஏற்பாடுகளும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதுடன் வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டு தப்பி வாழ்வோருக்கு உதவிசெய்வதற்கு சமூகங்களை ஊக்கப்படுத்தி வலுப்படுத்தும். இந்த மாற்றத்தினை ஏற்படுத்த அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment