இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் : முடிவுக்கு வந்தது பெஞ்சமின் நேதன்யாகுவின் ஆட்சி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் : முடிவுக்கு வந்தது பெஞ்சமின் நேதன்யாகுவின் ஆட்சி

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார். இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31ஆம் திகதி பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.

இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன் புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்றுவிட்டன.

இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும். முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் (49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.

இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment