(நா.தனுஜா)
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் கொள்கைகள், செயற்திட்டங்களின் விளைவுகள் அனைவருக்கும் ஒரேவிதமானவையாக அமையாது. அவை ஒவ்வொரு சமூகங்களின் மீதும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், நாட்டை முடக்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவை பல்வேறு மட்ட சமூகத்தினர் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுடனான நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான குழுக்கலந்துரையாடலொன்றில் நேற்று ஞாயிறுக்கிழமை கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது கொரோனா வைரஸ் தொற்று நோய்ப்பரவல் மூலம் எமது சமுதாயத்தில் காணப்படக்கூடிய சமத்துவமின்மை நன்கு வெளிப்பட்டுள்ளது. எனவே சமூகத்திலுள்ள மிகவும் வலுக்குறைந்த தரப்பினரை இந்தத் தொற்றுநோய்ப்பரவல் எவ்வாறு பாதித்திருக்கிறது என்பது குறித்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கருத்துக்களைப் பகிர்வதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நாம் முயற்சித்து வருகின்றோம்.
அன்றாட ஊதியம் பெறுவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், விசேட தேவையுடையோர், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளடங்கலாகப் பல தரப்பினரும் இந்தத் தொற்றினால் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த செய்திகளைப் பார்க்கிறோம்.
அதேபோன்று தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுமையாக முடக்கப்படும் காலப்பகுதிகளில் வீடுகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்திருப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
அதேபோன்று இதன் காரணமாக கல்வித்துறையிலும் பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர்களும், இளைஞர்களும் அவர்களது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
நெருக்கடிமிக்க சூழ்நிலையொன்றில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்படும் கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களின் விளைவுகள் அனைவருக்கும் ஒரேவிதமானவையாக அமையும் என்று கருத முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொரு சமூகங்களின் மீதும் வெவ்வேறுவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே ஒன்லைன் மூலமான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும்போது அதனை அனைவராலும் பயன்படுத்தமுடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.
நாட்டை முடக்கும்போது, அதனால் வீட்டுப் பணிப் பெண்கள் எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
மேலும் நாட்டின் வயது முதிர்ந்த சனத் தொகையினரை இந்த கொரோனா வைரஸ் பரவலானது உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் வெகுவாகப் பாதித்திருக்கின்றது. எனவே இத்தகைய நெருக்கடி நிலைமைகளில் கொள்கைகளை வகுக்கும்போது வள்வேறு தரப்பினர் மத்தியில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒன்லைன் மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதற்குரிய வசதிகளை அனைவராலும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதுமாத்திரமன்றி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாடசாலைகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, தற்காலத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்கள் பிரத்யேக வகுப்புகளில் பெரிதும் தங்கியிருக்கிறார்கள்.
இவையைனத்தும் அண்மைக் காலத்தில் கல்வியில் சமத்துவமின்மையைத் தோற்றுவித்திருக்கின்றன. அடுத்ததாக இவ்வாறானதொரு சவால்மிக்க தருணத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காகத் தனியொரு முறையில் மாத்திரம் தங்கியிருப்பது வரவேற்கத்தக்க விடயமல்ல. ஆகவே மாற்றுவழிகள் தொடர்பிலும் சிந்திப்பது இன்றியமையாததாகும். அதன் மூலம் கல்வியானது அனைவரையும் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.
அடுத்ததாக புதிய வழமை நிலை என்ற கருத்துருவாக்கத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். இது சாதாரணமான, இயல்பான நிலையல்ல. இது மிகவும் பாரதூரமானதும் இயல்பிற்கு முரணானதுமான நிலையாகும். ஆகவே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக இந்த நிலைக்கு இசைவாக்கமடைவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கக்கூடாது.
தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையையும் அது மென்மேலும் பரவலடையாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
No comments:
Post a Comment