பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பாடசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.
அப்போது தன்னை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒருவர் திடீரென மெக்ரோன் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மெக்ரோனை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் என்கிற இளைஞரையும், இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் பொலிசார் கைது செய்தனர்.
இதேவேளை இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விடயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனக்கூறிய மெக்ரோன் தனிப்பட்ட முறையில் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மெக்ரோனை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்கள் சட்ட காவல் கண்காணிப்பிலும், நான்கு மாதங்கள் சிறையிலும் கழிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதோடு குற்றவாளியான டேமியன் தாரெல் ஐ தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கண்காணிக்க வேண்டும், அப்போது அவர் குற்றங்கள் ஏதேனும் செய்தால் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த இரண்டு வருட காலத்தில் அவர் பயிற்சி வகுப்புகளில் இணைதல் அல்லது கட்டாயமாக வேலை செய்தல் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை செய்துவர வேண்டும்.
அதேசமயம் மேலும் குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்காக உளவியல் சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment