நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்திருக்கும் தடுப்பூசிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படும் திட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்களின் பங்குபற்றுதல் எதிர்ப்பார்த்தளவுக்கு இல்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் வெறும் 63 சதவீதத்தினரே தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக நேற்று கண்டி ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில், இந்த தடுப்பூசிகள் தொடர்பில் ஒரு சிலரால் வதந்திகள் பரப்பப்பட்டிருப்பதே காரணம். இந்த ஊசியை போட்டுக் கொண்டால் பல்வேறு சுகவீனங்கள் ஏற்படும் என்று சிலரால் கட்டுக்கதைகள் பரப்பி விடப்பட்டுள்ளன. இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தடுப்பூசிகளை இதுவரை பெற்றுள்ளனர் என்பதை உரியோர் அறிய வேண்டும்.
முதல் கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்களுக்கே இரண்டாவது கட்டமாக வழங்கப்படும் என்பது முக்கிய விடயம். தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் தமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை எமது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது குறித்து தோட்ட நிர்வாகம், தோட்ட வைத்திய அதிகாரிகள், நலன்புரி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள் மற்றும் பிரதேச மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , பொது சுகாதார உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பாரிய பொறுப்புள்ளது.
மக்களும் வீணான வதந்திகளை ஒரு பக்கம் வைத்து விட்டு இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும். மலையக இளைஞர் யுவதிகள் தமது பிரதேசத்திலுள்ளவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment