கொள்ளையர்களைப் போன்று செயற்படும் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் : பிமல் ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

கொள்ளையர்களைப் போன்று செயற்படும் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் : பிமல் ரத்நாயக்க

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொள்ளையர்களைப் போன்றே செயற்படுகிறது. மக்களின் கவனம் திசை திரும்பும் போது, அரசாங்கம் அதன் தேவைகளை சூட்சுமமாக நிறைவேற்றிக் கொள்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமது பிள்ளைகளினதும் பாதுகாப்பை குறித்து அச்சமடைந்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொழும்பு துறைமுக பொருளாதார சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது.

அது மாத்திரமின்றி ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு வித்தியாலயத்தை உருவாக்குவது தொடர்பான சட்ட மூலமும் எவ்வித அறிவித்தலும் இன்றி பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொள்ளையர்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. மக்களின் அவதானம் திசை திரும்பியுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும் சூட்சுமமாக துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது.

கல்வி தரத்தை குறைக்கும் நோக்கத்திலேயே தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு வித்தியாலயம் அமைக்கப்படுவது, அரசியல் தலைவர்களினது பிள்ளைகளினதோ, நாட்டிலுள்ள தனவந்தர்களின் பிள்ளைகளினதோ கற்றல் செயற்பாடுகளுக்காக அல்ல. 

அவ்வாறு அவர்கள் கற்பதாக இருந்தால், அதன் தரம் தொடர்பிலாவது சிந்தித்து செயலாற்றுவார்கள். ஆனால், சாதாரண மக்களின் பிள்ளைகளே அதில் கல்வி கற்க வேண்டிய நிலைமை ஏற்படும். 

தரமான கல்வி நிலையமாக அதனை உருவாக்குவதென்றால் உலகிலேயே சிறந்த விரிவுரையாளர்களை அங்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த உயர் கல்வி நிலையமானது வணிக நோக்கம் கருதியே உருவாக்கப்படவுள்ளது.

உயர்நிலை கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

இதேவேளை இராணுவத்தின் உயர் அதிகாரிகளை கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம். இந்த விடயங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment