ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் : நாடும் மக்களும் இருந்தால்தான் அனைவருக்கும் அரசியலில் ஈடுபட முடியும் - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் : நாடும் மக்களும் இருந்தால்தான் அனைவருக்கும் அரசியலில் ஈடுபட முடியும் - ரணில் விக்கிரமசிங்க

(லியோ நிரோஷ தர்ஷன்)

சுகாதார பிரிவுகளை மாத்திரமல்ல அமைச்சரவையையும் புறம்தள்ளிய நிலையே காணப்படுகின்றது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். அனுபவமிக்க தலைவர்களின் ஆலோசனைகள் இன்றியமையாதது என ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டிற்கான அறிவிப்புகளை வெளியிட்டு கடமைகளை செய்து வருகின்றேன். அதேபோன்று அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் நீங்களும் முடியுமானவரை மக்களின் சுகாதார நலன்களை சிந்தித்து செயற்படுமாறு குறித்த அமைச்சருக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, நாடும் மக்களும் இருந்தால்தான் அனைவருக்கும் அரசியலில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கட்சி உறுப்பினர்களுடன் இணையம் ஊடாக நேற்று கலந்துரையாடிய ரணில் விக்கிரமசிங்க, பொதுமக்கள் பாதூப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதால் மாத்திரமே இலங்கையை சட்ட ரீதியாக முடக்க இயலும் எனவும் குறிப்பிட்டார்.

நாடு தற்போது முழு முடக்கத்தில் உள்ளதா ? இல்லையா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. தேசிய அடையாள அட்டையின் எண்களின் அடிப்படையில் வெளியில் வரலாம் என பொலிஸ் பேச்சாளர் அறிவிக்கையில், இல்லை எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறுவதாக இதன்போது வஜிர அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் பரவலுக்குள் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவசரமாக வெளிநாடு சென்றமை ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் ஒரு பகுதியாகவே அமைவதாக சந்தித் சமரசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

1870 களில் பிரித்தானிய மன்னாரட்சியில் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தொற்று தடுப்பு விதிகளையே தற்போதைய அரசாங்கம் கையாள்கின்றது. இந்த விதியினை 1930 களில் மலேரியா தொற்று ஏற்பட்ட போதே பிரித்தானியர் மறுசீரமைத்து விட்டனர். இந்த சட்டத்தின் பிரகாரம் நாட்டை முடக்க இயலாது. பொதுமக்கள் பாதூப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதால் மாத்திரமே இலங்கையை சட்ட ரீதியாக முடக்க இயலும். 

மறுபுறம் இலங்கை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கும் எதிர்வு கூறல்கள் மிக ஆபத்தானதாகும். அதாவது இம்மாதம் இறுதியில் கொரோனா அச்சுறுத்தல் மிக்க நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்படலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் எமது நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் என இந்த கலந்துரையாலின் போது ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார்.

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்குதல், ஐ.டி.எச் வைத்தியசாலையின் கட்டிட நிர்மானம், இயற்கை சுவாசக் கருவிகள் கொள்வனவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கொள்வனவு குறித்து ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியபோது அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக பிரதி தலைவர் ருவன் விஜேவர்தண தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் பரவுகின்றது. கவனம் குறைவாக செயற்பட்டால் இலங்கைகையும் இந்த நோய் தாக்கும். தொற்று நோய் ஆய்வு கூடமொன்று உருவாக்குமாறு கூறியும் அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. வெறும் கட்டில்களை தயாரித்தால் மாத்திரம் போதாது மாறாக விசேட வைத்திய சேவையாளர்களும் அவசியம் என இதன்போது ஆசு மாரசிங்க குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சில தீர்மானங்களினால் பொலிஸ் அதிகாரிகளும் நெருக்கடிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. நாடு முடக்கப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என பாலித ரங்கே பண்டார கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசிகளை இருமுறை பெற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சிசேல்ஷ் போன்ற நாடுகளில் கொரொனா தொற்று மீண்டும் தீவிரம் கண்டுள்ளது. தீவுகள் சிலவும் முடக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தலைவர்கள் சிந்தித்து செயற்படாவின் நாடு படுமோசமான நிலைமையை எதிர்கொள்ளும். 

அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வை கூட்டி துறைமுக நகர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அந்த சட்டமூலத்தை எப்போது வேண்டுமெனாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் கொவிட் விடயத்தில் அரசாங்கம் காலம் கடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment