ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது : அமைச்சர் சரத் வீரசேகரவின் பதிலால் எதிர்க்கட்சிகள் சபையில் கடும் வாதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது : அமைச்சர் சரத் வீரசேகரவின் பதிலால் எதிர்க்கட்சிகள் சபையில் கடும் வாதம்

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்து வர அனுமதி வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். விசாரணை முடியும்வரை அழைத்துவரக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தால் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் விசேட கூற்றொன்றை முன்வைக்க எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், பாராளுமன்ற சிறப்புரிமைகளை பாதுகாத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதும் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. அதனால் அரசியல் ரீதியில் தீர்மானங்களை எடுக்காமல், அவரது பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளிப்பதற்காக எழுந்த அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரையும் அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர அனுமதிக்கக்கூடாது.

இடம்பெறும் விசாரணைகள் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாகும். இவ்வாறான நிலையில் இவர்கள் பாராளுமன்றத்துக்கு வந்து, பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி, அவற்றை வெளிப்படுத்தினால், இதன் பின்னர் கைது செய்யப்பட இருப்பவர்களுக்கு அது வாய்ப்பாக இருப்பதுடன், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லவும் இடமிருக்கிறது.

அதனால் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றதால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும், விசாரணைகள் முடியும் வரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர அனுமதிக்கக்கூடாது என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிறியெல்ல, ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த போது தற்போது பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில், சபாநாயகரின் கைச்சாத்து இல்லாமல் விடுவிக்க முடியாது என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்திருக்கின்றது.

பின்னர் கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது கொவிட் கதை ஒன்றை நீங்கள் தெரிவித்தீர்கள். தற்போது அமைச்சர் சரத் வீரசேகர பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக தெரிவிக்கின்றார். இந்த கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாகும். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை பாதுகாப்பது உங்களது கடமை அதனை நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர அனுமதிக்கக்கூடாது என அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இடம்பெறுவது பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகும். நீதிமன்ற தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படும் வரை ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதை நிறுத்த முடியாது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் ஒருவர் பாராளுமன்றத்துக்கு அனுமதிக்காமல் இருப்பதன் மூலம், அவர் 3 மாதங்கள் தொடராக பாராளுமன்றத்துக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டால் அவரது பாராளுமன்ற ஆசனம் சட்டரீதியில் இல்லாமல்போகும்.

இந்த நிலை தொடர்ந்தால் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துக்கொண்டு, அவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாப்படாத நிலையிலும் அவரது பாராளுமன்ற ஆசனம் இல்லாமல்போகும் என்றார்

இதன் போது எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில், ரிஷாத் பதியுதீன் ஒரு மக்கள் பிரதிநிதி. மக்கள் பிரதிநிதிகளுக்கு பாரிய கெளரவம் ஒன்று இருக்கின்றது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சிலர் மக்கள் பிரதிநிதி ஒருவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொண்டு, 3 மாதங்கள் தடுத்தி வைத்திருந்தால், அந்த மக்கள் பிரதிநிதி 3 மாதங்களின் பின்னர் பாராளுமன்ற ஆசனத்தை இழந்து வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதனால் அமைச்சரின் சட்டம் எங்களுக்கு தேவையில்லை. எந்த பக்கத்தில் இருந்தாலும் அமைச்சரின் சட்டத்தில் நியாயம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும் என்றார்.

அதனைத் தாெடர்ந்து எழுந்த முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா என பரிசோதிக்க பீ.சீ.ஆர். பரிசோதனை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பெறுபேறு இதுவரை வழங்கப்படவில்லை. 

அத்துடன் அமைச்சர் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானதாகும், அதனால் இது தொடர்பாக சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பொன்றை செய்ய வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர வேண்டாம் என தெரிவிப்பதற்கு அமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. யார் அந்த அதிகாரத்தை அவருக்கு வழங்கியது என கேட்டார்.

அதனைத் தொடந்து எழுந்த எஸ்.எம். மரிக்கார், ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட ரீதியில் தண்டனை வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதை அமைச்சருக்கு நிறுத்த முடியாது. அதனை செய்ய எந்த உரிமையும் இல்லை.

இறுதியாக சபாநாயகர் பதிலளிக்கையில், கொவி்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு என இரண்டு விடயங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

No comments:

Post a Comment