(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிக்க நாடாக இலங்கை சிவப்பு பட்டியலுக்குள் செல்லும் நிலை எதிர்வரும் வாரங்களில் ஏற்படலாம். அது மாத்திரமன்றி இந்தியாவின் பிளக் பங்கஸ் வைரஸ் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல் காணப்படுவதாக அரச தாதியர் உத்தியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமையினால் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகழ்வு பிரிவினரின் தரவுகளின்படி இவ்வாறு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேபோன்று நாட்டில் தற்போது தீவிரம் கண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைவிட பிளக் பங்கஸ் வைரஸ் பரவலும் இந்தியா ஊடாக இலங்கையை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஆளும் கட்சியால் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ளபோது வேறு தொற்றுக்களும் நாட்டில் தீவிரம் கண்டால் நிலைமை மோசமடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment