(இராஜதுரை ஹஷான்)
மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் வாரம் முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆரம்பத்திலிருந்தே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது. முதலாம் அலை சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் உருவாகிய இரண்டாம் அலையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதால் கொவிட் வைரஸ் பரவலை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆவது இடத்தை பிடித்தது.
புதுவருட காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாகவே கொவிட் கொத்தணி உருவாகியது. இவ்விடயத்தில் அரசாங்கத்தை குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பலம் வாய்ந்த நாடுகளினால்கூட கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது. பொதுமக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
மேல் மாகாணத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment