ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்திற்கு, கம்பஹா மாவட்ட எம்.பியாக அஜித் மான்னப்பெரும பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் - News View

Breaking

Post Top Ad

Friday, April 9, 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்திற்கு, கம்பஹா மாவட்ட எம்.பியாக அஜித் மான்னப்பெரும பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமானதன் மூலம் உருவான எம்.பி. பதவிக்கு அஜித் மான்னப்பெருமா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றையதினம் (09) அவை நடவடிக்கைகள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானதைத் தொடர்ந்து இப்பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பதவி வெற்றிடமானமை தொடர்பில் அஜித் மான்னப்பெருமவின் பெயர் குறிப்பிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி நேற்றையதினம் (08) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு, அடுத்தபடியாக விருப்பு வாக்குகளை கொண்டுள்ள அஜித் குமார மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 47,212 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் அஜித் மானப்பெரும ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது பாராளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் குறித்த ரிட் மனுவை கடந்த 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad