சிறு உதவிகளைச் செய்துவிட்டு பெரிய விளம்பரம் தேடும் இவ்வுலகில் பாரிய உதவியை செய்துள்ள புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பு - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

சிறு உதவிகளைச் செய்துவிட்டு பெரிய விளம்பரம் தேடும் இவ்வுலகில் பாரிய உதவியை செய்துள்ள புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பு - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

கிரான் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பறங்கியாமடுவில் 43 வீடுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினர் மலேசியா தமிழர் பேரவை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையோடு பறங்கியாமடுவில் மணல் குடிசைகளில் அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வந்த 43 குடும்பங்களுக்கு வீடுகளையும் மலசலகூட மற்றும் மின்னிணைப்பு வாழ்வாதார வசதிகளையும் செய்துகொடுத்துள்ளனர்.

அந்த வீடுகளின் திறப்பு விழா புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

சிறு உதவிகளைச் செய்துவிட்டு பெரிய விளம்பரம் தேடும் இவ்வுலகில் பாரிய உதவியை செய்துள்ள புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினரை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பாராட்டியுள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றுகையில், மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறையுள் ஆகிய மூன்றுமில்லாமல் இன்னும் அநேகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளற்று இன்றும் பல பிரதேசங்கள் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் இந்தப் பறங்கியாமடுப் பிரதேச மக்கள் காலாகாலமாக மணல் குடிசையோடு கடலை நம்பி அடிப்படை வசதிகளற்று வாழ்ந்துவந்தவர்கள்.

அதனை இனங்கண்டு இவ்வமைப்பினர் இன்று எவ்வித விளம்பரமுமில்லாமல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைச் சேவைக்காக மாவட்டத் தலைவர் என்ற வகையில் பாராட்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment