பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படாவிட்டால் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் - மைத்திரி மாத்திரமல்ல முழு அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் : நளிந்த ஜயதிஸ்ஸ - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படாவிட்டால் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் - மைத்திரி மாத்திரமல்ல முழு அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் : நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படாவிட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையும். இதன் உண்மை வெளிப்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கிடைக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமின்றி பிரதமர் உள்ளிட்ட முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமின்றி கடந்த அரசாங்கத்திலுள்ள சகலருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு விவகாரத்தை தற்போதைய அரசாங்கத்தால் புறந்தள்ள முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதாகக் கூறியே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலிலும் இதனையே கூறினார். 

எனினும் இம்மாதம் 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள போதிலும் பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கான முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.

பேராயர் உள்ளிட்ட முழு கத்தோலிக்க சமூகமும் இதில் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது. ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் என்பதும், முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் தகவல் கிடைத்திருந்தும் தாக்குதலை தடுக்க தவறியுள்ளனர் என்பதும் சகலரும் அறிந்த விடயமாகும். இதனையே ஜனாதிபதி ஆணைக்குழுவும் குறிப்பிட்டுள்ளது. 

எனவே மக்களுக்கு இந்த செயற்பாடுகள் மூலம் திருப்தியடைய முடியாது. எனவே அடுத்த கட்டமாக எவ்வாறான நடவக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை அவதானித்துக் கொண்டிக்கின்றோம். உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக 2019 ஏப்ரல் 4, 20 மற்றும் தாக்குதல் இடம்பெற்ற தினமான 21 ஆம் திகதி காலை என பல சந்தர்ப்பங்களிலும் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுக்க தவறிய முழு அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். 

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிற்கு எதிராக மாத்திரமின்றி முழு அமைச்சரவையும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

அத்தோடு இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படாவிட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையும். இதன் உண்மை வெளிப்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கிடைக்கும். அவ்வாறில்லை என்றால் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad