க.பொ.த உயர்தரப் பெறுபேறு விவகாரத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லை - இம்ரான் மஹ்ரூப் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

க.பொ.த உயர்தரப் பெறுபேறு விவகாரத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லை - இம்ரான் மஹ்ரூப்

க.பொ.த உயர்தரப் பெறுபேறு விவகாரத்தில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லை. இதனாலேயே பெறுபேறு வெளியீட்டுக்கு வெவ்வேறு திகதிகளைச் சொல்லி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றப்படுகின்றார்கள் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்று 6 மாதங்கள் தற்போது கடந்துள்ளன. இதன் பெறுபேறு தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன் வெளியிடப்படும் என முன்னர் சொல்லப்பட்டது. 

ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பின்னர் சொல்லப்பட்டது. இப்போது இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும் என அதாவது மே மாதத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரீட்சைப்பெறுபேற்றை வெளியிடக் கூடிய திகதியை அதன் பணிகள் நிறைவு பெறுவதைப்பொறுத்து பரீட்சை ஆணையாளரால் தீர்மானிக்க முடியும். அப்படி தீர்மானிக்கின்ற திகதி ஒரு திகதியாகத்தான் இருக்கமுடியும். எக்காரணம் கொண்டும் வெவ்வேறு திகதிகளாக இருக்கமுடியாது.

ஆனால் இன்று ஒரு பரீட்சைப் பெறுபேற்றை வெளியிடும் திகதியை சரியாக சொல்ல முடியாத அளவுக்கு அரசாங்கம் முறையான திட்டம் எதுவுமில்லாமல் தடமாறி வருவதை இதன் மூலம் அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில் சரியான பெறுபேறு வெளியிடும் திகதி சொல்லும் விடயத்தில் கல்வி அமைச்சரும் பெயில் விட்டுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

கடந்த எமது நல்லாட்சி அரசு காலத்தில் பரீட்சைப் பெறுபேறு வெளியிடும் திகதியை முன்கூட்டியே அறிவித்தோம். அதன்படி பெறுபேற்றை வெளியிட்டோம். இதற்கு காரணம் எம்மிடம் முறையான திட்டம் இருந்தது. அதனால் சரியான திகதியை சொல்ல முடிந்தது.

இன்றைய அரசாங்கத்திடம் இந்த விடயத்தில் முறையான திட்டம் எதுவும் இல்லாததால் தான் சொல்லும் திகதியில் பெற்பேற்றை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பரீட்சைக்குத் தோற்றிய சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றப்படுகின்றார்கள். அவர்களது பெற்றோரும், அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களும் ஏமாற்றப்படுகின்றார்கள். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் வேறு இருக்கின்றன. இந்த விடயங்களை கல்வி அமைச்சர் உணர வேண்டும்.

பெறுபேறு வெளியிடும் விடயத்தில் வெவ்வேறு திகதிகளை சொல்லி மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஏமாற்றுவதை விடுத்து சரியான திகதியை அறிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment