நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் சிலாபத்தில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு கடும் பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் சிலாபத்தில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு கடும் பாதுகாப்பு

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் என 12 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் விசேட கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் காணப்படுகின்ற பகுதிகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவின் ஆலோசனைக்கமை மேற்கொள்ளப்படவுள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கத்தோலிக்க தேவாலயங்களின் அருட் தந்தையர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் செயற்பட்டு வருகின்றனர்.

9356 பொலிஸாரும், 146 விசேட அதிரடிப் படையினரும், 2542 இராணுவத்தினரும் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய 12,040 உத்தியோகத்தர்கள் இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீர்கொழும்பில் 111 தேவாலயங்களுக்கும்,சிலாபத்தில் 101 தேவாலயங்களுக்கும், மட்டகளப்பில் 98 தேவாலயங்களுக்கும் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பொலிஸ் நடமாடும் சேவை, மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு சேவை என்பனவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் ஆலாசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment