(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று மாலையுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.
இன்று சனிக்கிழமை இரவு 9.30 மணி வரை 880 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இன்று சனிக்கிழமை இலங்கையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 100571 ஆகும்.
இவர்களில் 94035 தொற்றாளர்கள் இதுவரையில் முழுமையாக குணமடைந்துள்ளதோடு, 5724 பேர் வைத்தியசாலைகளிலும் இடை நிலை பராமறிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்
இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் களுத்துறை மாவட்டத்தில் தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட பிரதேசம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரையில் 5 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 21 ஆம் திகதி முதல் குருணாகல் மாவட்டத்தில் திட்டவெல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவும் , 22 ஆம் திகதி முதல் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவும், 23 ஆம் திகதி முதல் நிராவிய மற்றும் நிகடலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , இன்று முதல் களுத்துறையில் அதிகாரிகொட பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
18 வயது யுவதி உயிரிழப்பு
மேலும் 18 வயதுடைய யுவதியொருவர் உள்ளடங்கலாக இன்றைய தினம் மேலும் 4 கொவிட் தொற்றால் உயிரிழந்த நால்வரின் விபரங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.
அதற்கமைய வத்தளையை சேர்ந்த 18 வயதுடைய யுவதியொருவரும், நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஆண்ணொருவரும், பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக உயர்வடைந்துள்ளது.
இரு மாதங்களின் பின் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள்
சுமார் இரு மாதங்களின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 969 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த 38 பேர் உள்ளடங்குகின்றனர். ஏனைய 931 தொற்றாளர்களும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்களாவர்.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பெருமளவானோர் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். அந்த எண்ணிக்கை 251 ஆகும். இது தவிர கம்பஹாவில் 236 தொற்றாளர்களும், கொழும்பில் 194 தொற்றாளர்களும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 250 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று காலை வைத்தியசாலை மற்றும் இடை நிலை பராமறிப்பு நிலையங்களிலிருந்து 151 பேர் சிகிச்சை நிறைவடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்
தற்போது நாட்டில் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 111 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10643 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 12439 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment