கொரோனா தொற்றினால் மரணித்துள்ள ஜனாஸாக்களை இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

கொரோனா தொற்றினால் மரணித்துள்ள ஜனாஸாக்களை இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு

கொரோனா தொற்றினால் மரணித்துள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை, மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் கிராமத்தில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட காணியில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன.

இன்று (05) காலை முதல் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்திற்கமைய இவ்வேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் ஓட்டமாவடி - மஜ்மா நகர் காணியில் முதற் காட்டமாக பத்து குழிகள் தோண்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆறு அடி ஆழம், ஆறு அடி நீளம், மூன்று அடி அகலம் என்பவற்றில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழிகளுக்கும் மூன்று அடி இடைவெளியில் தோண்டப்பட்டுள்ளன.

மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் குறித்த காணியை மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய பணிமணை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள்;; செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 10 உடல்கள் பிரேத அறைகளின் குளிரூட்டிகளில் உள்ளதாகவும், உடல்களை தற்போது குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

(எச்.எம்.எம். பர்ஸான், எஸ்.எம்.எம். முர்ஷித்)

No comments:

Post a Comment