பெற்றோலியப் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 30, 2021

பெற்றோலியப் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பெற்றோலியப் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகார சபை, சுங்க திணைக்களம், பொலிஸ், இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் மற்றும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் என்பவற்றை உள்ளடக்கி இப்பொறிமுறை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெற்றோலிய தொழிற்துறைக்கு ஏற்புடைய அனைத்துச் செயற்பாடுகளுக்குமான பொறுப்பு ஆரம்பத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தற்போது பல்வேறு தரப்பினர்கள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தாலும், குறித்த நிறுவனத்தின் பணிகள் மசகு உராய்வு எண்ணெய் பொருட்களுக்கான தொழிற்துறையின் கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல்களில் மாத்திரம் அமைச்சுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமையில் பெற்றோலியப் பொருட்கள் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையொன்று உருவாக்கப்படவில்லை.

அதனால், பாவனையாளர் முறைப்பாடுகளை பெறல் மற்றும் தீர்வு காண்பதற்காக சுயாதீன வெளிப்பாட்டுத் தன்மையுடன் கூடிய பொறிமுறையொன்று எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழியப்பட்ட பொறிமுறை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகார சபை, இலங்கை சுங்கம், இலங்கை பொலிஸ், இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஏற்புடைய நிறுவனங்கள் தொடர்புபடுகின்றது.

அதற்கமைய, சட்டமூலமாக்கப்பட்டுள்ள 'பாவனையாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று' மற்றும் 'முறைப்பாடுகளை கையாளும் பிணக்குகள் தீர்க்கும் நடைமுறைகள்' போன்றவற்றை அமுல்படுத்தவும், அதற்காக ஏற்புடைய அரச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad