அரசாங்கத்திற்கு எதிராக விரைவில் மக்களுடன் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

அரசாங்கத்திற்கு எதிராக விரைவில் மக்களுடன் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தொடர்பில் மக்கள் வினவும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. ஆகவே விரைவில் மக்களுடன் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும். அரச தலைவர்கள் தவறுகளை திருத்தி ஆட்சியதிகாரத்தை முன்னெடுப்பது அவசியமாகும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது. அமைச்சுக்களின் செயலாளர்கள் உரிய காரணமின்றி இடமாற்றம் செய்யப்படுகின்றமை அரசியல் அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகிறது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்று செயற்பட்ட எம்மிடம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களின் வெறுப்பை பெற்றுக் கொண்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை ஆட்சிக்கு கொண்டு வர முன்னின்று செயற்பட்டுள்ளோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெறும் ஒரு சில செயற்பாடுகளை பார்த்து மௌனம் காப்பது பொருத்தமற்றதாகும். உரிய தீர்மானத்தை சிறந்த முறையில் எடுக்க வேண்டும்.

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொண்டு செயற்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டு மக்களுடன் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும். அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி அரச தலைவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad