ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னின்று செயற்படும் - மயந்த திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னின்று செயற்படும் - மயந்த திஸாநாயக்க

(எம்.மனோசித்ரா)

ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னின்று செயற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஊடகங்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களின் மூலம் ஜனாதிபதியால் யாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னர் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்த ஊடகவியலாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

எவ்வாறிருப்பினும் ஊடகங்கள் தொடர்பில் இது போன்று முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னின்று செயற்படும்.

இது இவ்வாறிருக்க நாட்டில் நெல் மற்றும் எரிவாயு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் அரசாங்கம் இதனை மறைக்கின்றது. எனவே மக்களிடம் உண்மைகளை மறைக்காமல் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாரிய சுற்றாடல் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பல பௌத்த மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்து அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கத்திலேயே பாரியளவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தற்போது சுற்றாடலை பாதிப்படையச் செய்து ஹோட்டல்களை நியமிப்பதற்கு அனுமதிபத்திரமளிக்கப்பட்டுள்ளது. முத்துராஜவல உள்ளிட்ட முக்கிய வனப் பகுதிகள் தற்போதைய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னரே பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன. நாம் கூறுவது பொய்யெனில் அதனை எவருக்கேனும் உறுதிப்படுத்துமாறும் சவால் விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment