பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் : யுவதியின் தலையை தேடி களனி கங்கையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் : யுவதியின் தலையை தேடி களனி கங்கையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட இரத்தினபுரி - குருவிட்டை, தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திலினி யசேமா ஜயசூரியவினுடைய சடலத்தின் தலைப் பகுதியை கண்டுபிடிக்க விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த யுவதி, தனது வீட்டிலிருந்து சிவனொளி பாதமலைக்கு செல்வதாக கூறி வரும் போது எடுத்து வந்ததாக கூறப்படும் பையொன்று இதுவரை கண்டறியப்படாத நிலையில் அது குறித்து பொலிஸாரின் கவனம் திரும்பியுள்ளது.

குறித்த யுவதி எடுத்து வந்த அந்த பையில், வெட்டப்பட்ட அவரின் தலையை சந்தேக நபர் வைத்து களனி கங்கையில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி இது குறித்த விஷேட நடவடிக்கைகளை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பித்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் கடற்பிரிவின் 8 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு, இரு விஷேட படகுகளில் களனி கங்கையில் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் கடற்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியங்கர சில்வாவின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'உண்மையில், தற்போதைய விசாரணைகளில் யுவதியின் தலை மீட்கப்படவில்லை. எனினும் அவர் வீட்டிலிருந்து வரும் போது உடன் எடுத்து வந்த ஒரு பை இதுவரை கண்டறியப்படாது உள்ளது.

எனினும் தலையற்ற சடலம் இருந்த பை பின்னர் கொள்வனவு செய்யப்பட்டது என்பதும், தற்கொலை செய்துகொண்டுள்ள சந்தேகநபர் முதுகில் மற்றொரு பையை சுமத்து செல்வதும் விசாரணைகளில் அவதானிக்கப்பட்ட விடயங்களாகும்.

அப்படியானால் குறித்த யுவதி வீட்டிலிருந்து எடுத்து வந்த பை எங்கே என்ற சந்தேகம் எழுகிறது.

அந்த யுவதியும், சந்தேகநபரும் ஒன்றாக தங்கியிருந்த ஹங்வெல்லை தங்கு விடுதியானது, கொழும்பு - ஹங்வெல்லை பிரதான வீதியில் ஹங்வெல்லை நகரை கடந்து சிறிது தூரத்தில் வலப்பக்கமாக அமைந்துள்ளது. அதனை அண்டியதாக களனி கங்கை செல்கிறது.

எனவே ஒரு வேளை யுவதியின் தலையை, யுவதியின் பயணப் பையில் இட்டு களனி கங்கையில் வீசியிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.

எனவே களனி கங்கை கடலுடன் கலக்கும் முகத்துவாரம் முதல் ஹங்வெல்லை வரையிலான ஆற்றுப் பகுதி சோதனை செய்யப்படவுள்ளது.

குறிப்பாக ஏதேனும் ஒரு பை அல்லது பொதி ஆற்றில் மிதக்கிறதா அல்லது ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள ஏதாவது தடைகளில் சிக்கிக் கொண்டுள்ளதா என விஷேடமாக அவதானிக்கப்பட்டு தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.' என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த முதலாம் திகதி தலையற்ற சடலாமாக மீட்கப்பட்டுள்ள 30 வயதுடைய திலினி யசேமா ஜயசூரிய என நம்பப்படும் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் பொறுப்பில் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த சடலத்தின் ஆள் அடையாளத்தை, அறிவியல் ரீதியில் உறுதிசெய்ய டி.என்.ஏ. பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் அதன் முடிவு கிடைக்கும் வரை பிரேத பரிசோதனைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, கொலையாளி என சந்தேகிக்கப்படும் உப பொலிஸ் பரிசோதகர் பேமசிறியும் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், அவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகளும் இன்று மாலை வரை முன்னெடுக்கப்படவில்லை. 

அவரது சடலம் மீது பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவை அடுத்தே பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படும் என சடலம் வைக்கப்பட்டுள்ள சிரிகல வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில் டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்புக்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜயஸ்ரீ ஆகியோரின் மேற்பார்வையில், கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த சந்ரசேகர, நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, 3 பொலிஸ் குழுக்கள் சிறப்பு விசாரணைகளை நடாத்தி வருகின்றன.

No comments:

Post a Comment