ஒரு வருடத்திற்குப் பின்னர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளும் நாளை முதல் முழுமையாக இயங்கும் - வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 28, 2021

ஒரு வருடத்திற்குப் பின்னர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளும் நாளை முதல் முழுமையாக இயங்கும் - வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த ஒரு வருட காலமாக விஷே‪ட கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவாக செயற்பட்டு வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளும் திங்கட்கிழமை 29.03.2021 தொடக்கம் வழமை போன்று இயங்கத் தொடங்கும் என அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கடந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து விஷே‪ட கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவாக செயற்பட்டு வந்ததால் அதன் வழமையான சுகாதார பராமரிப்பு சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

பிரதேச மக்களின் நன்மை கருதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அதன் வழமையான சிகிச்சைகளை நடத்திச் செல்ல ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காத்தான்குடி தள வைத்தியசாலையின் சார்பில் வைத்திய அத்தியட்சகர் ஜாபிர் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அந்த வேண்டுகோளை நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில் சுகாதார அமைச்சின் தொழினுட்பக் குழுவினர் கடந்த 13.03.2021 அன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி அவ்வைத்தியசாலையை மீண்டும் இயங்க வைக்கும் முகமாக அதற்கான சாத்தியவள அறிக்கை பெறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின்படி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை மீண்டும் அதன் வழமையான சுகாதார பராமரிப்பு சேவைகளுக்காக திறப்பதற்கு சுகாதார அமைச்சு சிபார்சு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் முதலாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்தும் கொண்டு வரப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் விஷே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment