அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வரும் மியன்மார் ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் 1ம் திகதி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியன்மார் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனநாயகத்தை மீட்கக் கோரி நடைபெறும் இந்த போராட்டத்தை மியன்மார் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை மீறி போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை ராணுவம் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆனாலும், ராணுவத்தினரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியன்மாரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, மியன்மார் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 54 பேர் உயிரிழந்தது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவுத் தலைவர் மிஷல் பலசெட் மியான்மர் ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது மியன்மாரில் ராணுவத்தின் அத்துமீறல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இரு நாட்டு ராணுவ தாக்குதல்களின் போது காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தாக்கக் கூடாது என்பது ஐ.நா.வின் விதி.
ஆனால் இந்த விதியை மீறி மியன்மார் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவ ஊழியர்களும் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.
உலகில் மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும் அதனை எதிர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதற்கு உலக நாடுகள் இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment