இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலையான 40 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலையான 40 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தமது படகுகள் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 400 க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் தனுஸ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் கைது செய்வோம் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மகேஸ் மற்றும் மரிய சிங்கம் ஆகிய இருவரது படகில் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (26) காலை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடராமல் படகுடன் விடுதலை செய்து தாயகம் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருகோணமலை மற்றும் காரைநகர் கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களையும் அவர்களது நான்கு படகுகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தனர்.

பின் இலங்கை கடற்படை சர்வதேச கடல் எல்லையில் வைத்து மீனவர்களை படகுடன் அனுப்பி வைத்தனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகுடன் நேற்று வெள்ளிக்கிழமை (26) மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு சென்றனர்.

கடந்த புதன்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த 10 க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை கப்பல்களில் இருந்த கடற்படை வீரர்கள் இந்த பகுதியில் மீன் பிடித்ததால் உங்களை கைது செய்கிறோம் என கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

பின் நேற்று காலை இலங்கை அரசு விடுதலை செய்ததாக அறிவித்து கடற்படை முகாமில் இருந்து படகுடன் அனுப்பி வைத்தாக கரை திரும்பி மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment