மரபுரிமை சின்னங்களை பராமரிக்க அனுமதிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் கோரிக்கை - அனுமதிக்கு முயற்சிப்பதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

மரபுரிமை சின்னங்களை பராமரிக்க அனுமதிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் கோரிக்கை - அனுமதிக்கு முயற்சிப்பதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக யாழ். மாநகர முதல்வருக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

எமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவான வகையிலும் எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரபுரிமைச் சின்னங்களை நாமே பாதுகாக்கும் நோக்குடனும் அவ் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கின்ற பராமரிக்கின்ற பொறுப்பினை எமக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

மரபுரிமைச் சின்னங்களை முழுமையாக கையளிக்காது விடினும் ஒப்பந்த அடிப்படையில் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கின்ற உரிமையை மாநகர சபைக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றினை தருமாறும் அதற்குரிய அனுமதிக்கு முயற்சிப்பதாகவும் கூறினார். 

முக்கியமாக சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு மற்றும் வளைவு, யமுனா ஏரி ஆகிய தமிழர் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாத்து பாராமரிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் ஒரு இணைக்கப்பாட்டுக்கு வருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. 

அத்துடன் குறித்த இடங்களில் அவ் மரபுரிமைச் சின்னங்களின் வரலாற்றினை மூன்று மொழிகளிலும் இடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு பிற்பாடு தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் யாழ். கோட்டை, யமுனாஏரி, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ். கோட்டைப் பகுதியை சுற்றிய வெளிப் பகுதி குறிப்பாக முத்தவெளி பகுதியில் வளர்ந்திருக்கின்ற பாதீனியச் செடிகள் மற்றும் புற்களை அகற்றி குறித்த பகுதியை யாழ். மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் இணைந்து தூய்மைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சுண்டுக்குளி நிருபர்

No comments:

Post a Comment