பெண்னொருவர் இலங்கையில் முதன் முறையாக பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை பெருமையடைய வேண்டிய விடயமாகும். எனினும் அவரது நியமனத்தை சவாலுக்குட்படுத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபராக உயர் பதவி வகிக்கின்ற பிம்சானி ஜாசிங்க ஆராச்சியின் நியமனத்தை சவாலுக்குட்படுத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கசர்களினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். பெண்னொருவர் இவ்வாறு உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பொலிஸார் என்ற ரீதியில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
இவர் சர்வதேச விருதினைப் பெற்ற மதிப்பிற்குரிய பெண்ணாவார். இவ்வாறான நிலையிலும் அவரது நியமனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் என்ன கூறுவதென்று தெரியவில்லை என்றார்.
இந்நிலையில், பொலிஸ் சேவையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவில் அமைப்புக்கள் இணைய வழியூடாக பொதுமக்களின் கையெழுத்து கோரும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
அத்தோடு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆளும், எதிர்தரப்பு சகல பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதி பொலிஸ்மா அதிபர் பிம்சானி ஜாசிங்கவின் சார்பில் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment